பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

ஆகவே, கோட்டையூருக்கு உதயசூரியன் சென்று நாட்டைப் பெருவளநல்லூர் ஆக்கவேண்டுமானால், தீ மிதிக்கச் செல்லக்கூடாது என்ற முடிவுக்கு வந்தான் கருத்தப்பன், சூழ்ச்சிக்காரரின் திட்டம் அறிந்ததால்.

வீடு சென்று மெய்யம்மையிடம் கூறினான், உதய சூரியனைக் கோட்டையூர் நுழைய முடியாமல் தடுத்திடத் தீட்டப்பட்டுள்ள சூழ்ச்சி பற்றி.

மெய்யம்மைக்கு அப்போதுதான் பவுனாம்பாள் பசப்பிப் பேசியதன் காரணம் புரிந்தது.

தீ மிதிக்க முடியுமா என்று கேட்டு, ரோஷமூட்டப் பார்ப்பது, நம்மைக் கோட்டையூர் வரவிடாது தடுப்பதற்காகத்தான் என்பது புரிந்ததும், மெய்யம்மை, தீ மிதிக்கச் செல்லத் தேவையில்லை என்று தீர்மானித்தாள்.

தீமிதிக்கப் போவதில்லை, தங்கள் சூழ்ச்சி வெற்றி பெறப் போவதில்லை என்று தெரிந்ததும் பவுனாம்பாளும், வலைவிரிப்பானும், கோட்டையூரானும் கோலெடுத்தானும் முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டனர்.

மெய்யம்மை தன் குழந்தை உதயசூரியனை உச்சி மோந்து முத்தமிட்டு, அரசாளப் பிறந்தவனே! உன்னை அழிக்க அல்லவா அவர்கள் சூழ்ச்சி செய்தார்கள், எங்களைத் தீமிதிக்கச் செல்லும்படி தூண்டிவிட்டு. உண்மை புரிந்தது. உன்னைக் காத்திட முடிந்தது. தீயோர் எண்ணத்தில் தீ விழட்டும் என்று கூறி மகிழ்ந்தாள்.

தீ மிதிக்கமாட்டானாம்... துணிவு இல்லை என்று... தூற்றிப் பார்த்தான் வலைவிரிப்பான்.

அவனோட துணிவு பற்றிப் பேசுவது இருக்கட்டும் நீ ஏன் உதயசூரியனைக் கோட்டையூர் பாதையிலேயே நடக்கக்கூடாது தீ மிதிக்க அவர்கள் சென்றால் என்று ஒரு புது உத்திரவு போட்டாய்? தைரியம் என்றா அதற்குப் பெயர் ! சூது! சூழ்ச்சி! அதைக் கருத்தப்பன் புரிந்து கொண்டதால்தான், நீங்கள் மூட்டிய தீயிலேவிழ மறுத்துவிட்டார்கள்! இது புரியவில்லையா எங்களுக்கு என்று நாட்டாண்மைக்காரர் தெளிவப்பன் கூறினார்.

நல்ல காரியம் செய்தாயப்பா! பயந்து கொண்டிருந்தோம், அரசாளப் பிறந்தவனை விட்டுவிட்டு நீங்கள் எங்கே தீ மிதிக்கப் போய்விடுவீர்களோ என்று, நல்ல-