பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

வேளை, உங்களுக்கு அவர்கள் சூழ்ச்சி புரிந்து விட்டது— என்று வாக்களிப்பர் பாராட்டினார்.

தீயிலே தள்ளி, என்றென்றும் உதயசூரியன் கோட்டையூர் நுழையாதபடி செய்துவிடலாமென்று சூழ்ச்சி செய்தோம், முடியவில்லை; இனி கோட்டையூர் பாதையிலே காவலிருக்க வேண்டும், உதயசூரியனை அழைத்துக் கொண்டு, கருத்தப்பனும் மெய்யம்மையும் வராதபடித் தடுத்திடவேண்டும் என்று கோட்டையூரானும் கோலெடுத்தானும் முனைந்தனர்.

அவர்களுக்குத் துணையாக நோட்டூரான், இருட்டூரான் போன்றார் நின்றனர்.

பயப்படாதே தம்பி! நாங்கள் துணை இருக்கிறோம் என்று கூறி வாக்களிப்பாரும், தெளிவப்பனும் முன் வந்தனர்; உதயசூரியன் புன்னகை புரிந்தான்.

அன்பானந்தரே! புதுமையாக இருக்கிறதே உமது கதை! எதற்காக இப்படி ஒரு கதையைக் கூறினீர்கள் என்று கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே “ஏனப்பா! கதையைக் கேட்டதும் உனக்கு கருத்துப் புரியவில்லையா?” என்று கேட்டுவிட்டு, “இப்போது நீயும் உன்னுடைய உடன்பிறப்புக்களும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? எந்த முயற்சியிலே மும்முரமாக ஈடுபட்டிருக்கிறீர்கள்? தேர்தல் வேலையிலே தானே” என்று ஒரு கேள்வியை எழுப்பினார்.

ஆமாம். தேர்தல் வேலையிலேதான்! அது என்ன பாதகச் செயலா? கேவலமானதா” என்று நான் கேட்டேன்.

“ஜனநாயக முறையை ஏற்றுக்கொண்டுவிட்டு, தேர்தல் காரியத்தைக் கேவலமானது என்று கூற முடியுமா? திருமணம் செய்துகொண்டு, குடும்பத்தை நடத்திச் செல்வது கேவலம் என்று சொல்வார் உண்டா? தேர்தல் என்பது ஜனநாயகத்தில் ஏற்பட்டுவிடும் மிக முக்கியமான கடமை. நான் அதைக் குறை கூறவில்லை. இந்தத் தேர்தலில் ஈடுபட்டுப் படிப்படியாக நீங்கள் முன்னேறி வருகிறீர்கள். இல்லையா?” என்றார்.