இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காஞ்சிக் கடிதம்: 80
மரண அடி கொடுப்பாராம்!
★ காமராசரின் கோபத்துக்குக் காரணம் எரிச்சல்!
★ காமராசரின் புகழொளி காங்கிரசுக்குப் புதிய வலிவாம்!
★ நேருவின் புகழொளிக்கே மாய்ந்திடாத கழகம் காமராசரின் புகழொளி கண்டா மிரண்டிடும்?
★ ஏமாற்ற மடைந்த மக்களின் படைப்புகள் எதிர்க்கட்சிகள்!
★ காமராசரின் மரண அடிப் பேச்சு கனதனவான்களுக்குத் தெம்பூட்டுவதற்காகவே!
தம்பி!
மரண அடி கொடுக்கப் போகிறேன் என்று பிரகடனம் செய்து விட்டுள்ளார் காமராஜர். எதிர்க் கட்சிகளுக்குத்தான்!
இவர் பாசம் பொழிவார், ஆதரவு அளிப்பார், என்றா எதிர்க்கட்சிகள் எண்ணிக் கொண்டிருக்க முடியும்? தாக்குவதற்குத்தான் துடித்துக் கொண்டிருப்பார், அதற்கே திட்டமிடுவார் என்பது எல்லோருக்கும் புரியும்! இதை இவர் சொல்லித்தானா எதிர்க்கட்சிகள் தெரிந்து கொள்ள வேண்டும்? நன்றாகத் தெரியும், மிக நன்றாகத் தெரியும்.