பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

நேருவைக் காட்டிலும் காமராஜர் உலகமறிந்தவர்; நேருவிடம் உலகம் காட்டிய மதிப்பைவிட அதிக அளவு மதிப்பினைக் காமராஜரிடம் காட்டுகிறது; நேருவின் அறிவாற்றலைக் காட்டிலும் பன்மடங்கு அதிக அறிவு கொண்டவர் காமராஜர்; பிரச்சினைகளை விளக்குவதில், வாதத் திறமையில், சிக்கல்களை நீக்குவதில், நேருவுக்கும் இல்லாத திறமை இவருக்கு உண்டு என்பார் உண்டா?

மக்களைத் தன்வயப்படுத்திடும் ஓர் புன்னகை, கோபத்தையும் கொதிப்பையும் கூட ஓரளவு மறந்திடச் செய்திடும் நடை அழகு, உலகப் பிரச்சினைகளைப் படம்பிடித்துக் காட்டும் தனித்தன்மை, உலகின் பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் மட்டுமல்லாமல், கவிஞர்கள், தத்துவ மேதைகள், காவிய கர்த்தாக்கள், விஞ்ஞான வித்தகர்கள், பொருளாதார நிபுணர்கள், புரட்சி பூத்திடச் செய்த மாவீரர்கள் ஆகியோருடன் நேசத் தொடர்பு கொண்டிருந்ததால் ஏற்பட்டிருந்த விசாலமான நோக்கம், தாராளத்தன்மையுடைய சிந்தனை, இதயங்களை ஈர்த்திடத்தக்க இலட்சிய ஆர்வம் இவ்வளவும் கொண்டல்லவா விளங்கி வந்தார் பண்டிதர்.

அவர் புகழ் பாடாத ஏடுண்டா? பரவாத நாடுண்டா? படம் இல்லாத வீடு உண்டா?

எத்தனை எத்தனை கோலத்தில் அவர் படம்; நித்தநித்தம்; இதழ்கள் மூலம்!

சிந்திக்கும் நேரு, சிரித்திடும் நேரு, சீறிடும் நேரு, குழந்தைகளுடன் கொஞ்சிடும் நேரு, விளக்கிடும் நேரு, வினவிடும் நேரு, மாபெருங் கூட்டம் கண்டு நெஞ்சு நெகிழ்ந்திடும் நேரு, ஊர்வலத்தில் முகம் மலர்ந்திடும் நேரு, விமான நிலையத்தில் நேரு, விஞ்ஞானக் கூடத்தில் நேரு, குதிரை மீது நேரு, குதூகல நடனமிடும் நேரு, ஜொலிக்கும் நட்சத்திரங்களுடன் நேரு, உழைக்கும் பாட்டாளிகள் மத்தியில் நேரு, பத்திரிகை நிருபர்களிடம் நேரு, வணிகர் விழாவில் நேரு, பக்ரா பக்கத்தில் நேரு, குலு பள்ளத்தாக்கில் நேரு, நாகநாடு உடையில் நேரு, பர்மியக் கோலத்தில் நேரு, ஆங்கில உடையில் நேரு, கேக் வெட்டும் நேரு, பாங் அதிப-