140
தம்பி, அனைவருமே போற்றிடத்தக்க வீரச் செயலைப் புரிந்தார் அந்த மாதர்குல மாணிக்கம்.
எழு நூறு போலீஸ் வீரர்கள் தடியும் துப்பாக்கியும் தயாராக வைத்துக்கொண்டுள்ளனர்—ஆனால் செய்வது யாது என்று அறியாமல் திண்டாடித் தவிக்கின்றனர்; கட்டிடத்துக்கு வெளியே இருந்தபடி. உள்ளே இருந்தோ “ஐயய்யோ! அம்மம்மா! ஆபத்து! ஆபத்து! ஆண்டவனே! காப்பாற்று! ஓடிவாருங்கள். வாருங்கள் ஓடி!” என்ற கூக்குரல் பீறிட்டுக்கொண்டு வருகிறது. துப்பாக்கி வேட்டுக் கிளப்பி உள்ளே நுழையலாம்!! ஆனால், துப்பாக்கியால் சுட்டால், கொடுமைக்காரர்மீது குண்டு பாய்ந்திடாமல், ஆபத்தில் சிக்கிக்கிடப்போர்மீது வீழ்ந்தால், என்ன ஆவது என்ற அச்சம், போலீசாரைச் செயலற்றவர்களாக்கி விட்டது.
பள்ளிக்கூடக் கட்டிடம் தம்பி, உள்ளே தாளிடப்பட்டுக் கிடக்கிறது—ஆறு வயதிலிருந்து பத்து வயது வரையில் உள்ள சிறார்கள் சிறுமியர்கள் — அந்தச் சிட்டுகள் உள்ளே சிக்கிக்கொண்டன, சித்திரவதை செய்யப்போகிறோம். வெட்டிக் கண்டதுண்டமாக்கி வீசி எறியப்போகிறோம் என்று வெறியர் இருவர் கொக்கரிக்கின்றனர். எப்படியோ, பள்ளிக்கூடத்துக்கு உள்ளே நுழைந்துவிட்ட இரண்டு வெறியர்கள், பள்ளி மாணவர்களின் கைகாலைக் கட்டிப்போட்டு விட்டனர்; ஆசிரியர்களையும் சிறைப்படுத்திவிட்டனர்—வெறியர் கரத்தில் கத்தியும் இருக்கிறது, துப்பாக்கியும் இருக்கிறது. எவ்வளவு பதைபதைத்திருக்கவேண்டும் அந்தப் பாலகர்கள்!!
ஆறு மணி நேரம். 92 குழந்தைகள், மூன்று ஆசிரியர்கள் இப்படிச் சிக்கிக் கொண்டனர்—இரண்டு வெறியர்கள் உள்ளே இருந்துகொண்டு கொக்கரிக்கிறார்கள்—மரியாதையாக நாங்கள் கேட்பதைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு, உங்கள் குலக்கொழுந்துகளை மீட்டுக்கொண்டு செல்லுங்கள்! தாக்கிட நுழைவீரேல், நாங்கள் பிடிபடுமுன்பு, குழந்தைகளை வெட்டிக் குவிப்போம்!!—என்கிறார்கள்.
அந்தக் கொடியவர்கள் கொண்டுவந்து கொடுக்கும்படி கேட்டது என்ன தெரியுமா, தம்பி, கேள், 18,24,000 ரூபாய் வேண்டும் என்கிறார்கள்!!
உள்ளே, துள்ளி விளையாடும் பிள்ளைப் பருவத்தினர்—அவர்களை உயிரோடு திரும்பப் பெறவேண்டுமானால், பதினெட்டு இலட்சரூபாய் தரவேண்டும் என்கிறார்கள்—கூறுபவர்கள் கரத்தில் கத்தி, துப்பாக்கி! வெளியே பல நூறு