பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/144

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

குழந்தைகள் பிழைத்துக்கொண்டன! ஊரார் குதூகலமடைந்தனர்! இரு பித்தர்களில் ஒருவன் மருத்துவமனையில் இறந்தொழிந்தான் - மற்றவன் கூண்டில் தள்ளப்பட்டுக் கிடக்கிறான்.

தெய்வமே! தெய்வமே! எங்கள் குடும்பத்துக்கு நீயே கண்கண்ட கடவுள்! - என்று பலரும் கண்கசியும் நிலையில் நின்று, அன்பைக் காணிக்கையாக்கி அந்த ஆரணங்கின் காலடியில் கொட்டி இருப்பர். நமக்கே தோன்றுகிறதே, அந்த நல்ல பெண்மணியின் நாமத்தை வாழ்த்த வேண்டும் என்று. தம்பி! கார்ட்டோரி என்பது அந்தக்காரிகையின் பெயர். பித்தர் இருவரில், ஒருவன் பெயர் ஆர்ட்டூரோ, மற்றவன் பெயர் ஆஸ்வால்டோ. பெயர், அந்த நாட்டுக்குத் தக்கபடி, மொழியின் தன்மைக்கேற்ப அமைந்திருக்கட்டும்—அந்த அணங்கு காட்டிய தீரத்துக்குத் தக்கவிதத்தில், பெயர் சூட்டி நாம் மகிழலாம், தம்பி, மறக்குடி மகள்!!

மகளிர் குலத்தின் மாண்பினை விளக்கிடும் நோக்குடன் யாரோ ஆசிரியர் ஆர்வத்துடன் கட்டினார் போலும்—வீரக்காதை தீட்டும் புலமை இதிலே விளக்கமாகத் தெரிகிறது என்று எண்ணிக்கொண்டுவிடாதே தம்பி, இது கதை அல்ல; உண்மை நிகழ்ச்சி—சென்ற திங்களில், இத்தாலி நாட்டில் டெராஜானோ, எனும் ஊரில் நடைபெற்றது.

இந்த வீரக்கதையை நான் படித்ததும், வியப்புற்றேன்—பலப்பல கருத்துக்கள் அலை முறையில் தோன்றிடலாயின!

கொடுமை இந்த அளவுக்கெல்லாம் செல்லுகிறதே என்று ஓர் எண்ணம் குடைந்தது—உலகு இன்றளவும் நாகரீகத்தைக் கடைப்பிடிக்கக் காணோமே என்ற கவலை மனதினை அரித்தது.

அந்த வனிதையின் வீரமே வீரம் என்ற எண்ணம் வந்தது—ஆம்! ஆம்! உலகு கெட்டுக் கிடப்பினும், நம்பிக்கைக்கு இன்னமும் இடமிருக்கிறது, இத்தகைய நாரீமணிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்—என்ற மகிழ்ச்சி மலர்ந்தது.

அந்த இரண்டு பித்தர்களை எண்ணிக்கொண்டேன்—கள்ளங்கபடமற்ற அந்தக் குழந்தைகளிடம் தமது கொடுவாளைக் காட்டி நின்றனரே!—என்பதை நினைத்தபோது நடுக்கமே எடுத்தது. இவர்களிடம் மனிதத்தன்மை மாண்டொழிந்தது ஏனோ என்று எண்ணினேன்—பித்தர்களன்றோ! அவர்கட்கு, தாம் எது செய்கிறோம், எதற்காகச் செய்கிறோம்