பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/167

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

165

பொன்னும் மணியும் ஒரு நாட்டுக்கு வாழ்வும் வளமும் அளித்திடாது; ஆனால் எந்த நாடும் பொன்னாடு ஆகத்தக்க நிலையை ஏற்படுத்த இரும்பும் நிலக்கரியும் இருக்கவேண்டும். இந்த இரு செல்வங்களையும் தமிழகம் தன்னகத்தே கொண்டிருக்கின்றது. நெய்வேலி பழுப்பு நிலக்கரியின் பாங்கினைப் பாராட்டாத நிபுணர் இல்லை; மிக உயர்தரமானது என்கின்றனர்; கிடைக்கும் அளவும் மிகப்பிரம்மாண்டமானது; பல நூற்றாண்டுகள் கிடைக்குமாம்!

கஞ்சமலை, கோதுமலை, கொல்லிமலை, கொத்தளமலை, பச்சைமலை, பெருமாமலை, தீர்த்தமலை, சித்தேரிமலை ஆகிய இடங்களில், இரும்பு சிறைப்பட்டிருக்கிறது, விழிப்புற்று எழுச்சிபெற்ற தமிழகம் அமையுமானால், தூங்கிக் கிடக்கும் இந்தக் கருப்புத் தங்கத்தை வெட்டிக் கொணர்ந்து, தமிழகத்தைத் தொழிலகமாக்கிச் செழிப்பினைக் காணலாம். சேலம் மாவட்டத்திலே இரும்பு! தென் ஆற்காடு மாவட்டத்திலே நிலக்கரி! சேலத்து இரும்பு 30 கோடி டன் என்கிறார்கள். நெய்வேலி நிலக்கரி 100 சதுரமைல் அளவுக்கு அடைந்து கிடக்கிறதாம், 200 கோடி டன் அளவு நிலக்கரி உள்ளது என்கின்றனர்.

சேலம் சேர்வராயன் மலையில் பாக்சைட், மாக்னசைட், திருச்சி அரியலூர் வட்டாரத்தில் ஜிப்சம், குமரி முனையில் தோரியம்,—தம்பி! காவிரிப் பகுதியில் பெட்ரோலாம்! எந்தெந்தப் பொருள் கிடைக்காமல் நாடு பல திண்டாடுகின்றனவோ, அந்தப் பொருள் யாவும் இங்கு நமக்காக இயற்கை, கட்டிக் காத்து வருகிறாள்—கனிவுடன் அழைக்கிறாள் ஆனால், வெட்டி எடுக்க நமக்கு உரிமை ஏது!

கட்டித் தங்கமடா, மகனே! பலகாலமாக உனக்காக நான் காத்து வந்திருக்கிறேன், வெட்டி எடுத்துக்கொள் என்று வாஞ்சனையுடன் தாய் அழைக்கிறாள், தனயன், “அந்தோ அன்னையே! என் கரம் கட்டுண்டு கிடக்கிறதே!” என்று கண்ணீர் பொழிந்து நிற்கிறான்.

சேலத்து இரும்பு சிறைப்பட்டிருக்கிறது—டாட்டா கம்பெனிக்கு நாம் கப்பம் கட்டுகிறோம்.

நெய்வேலி நிலக்கரி வெளிவர மறுக்கிறது, இங்கு ஏழையின் கும்பி, இல்லாமையால் எரிகிறது! காடு போதும், நாட்டுக்கு செல்வமளிக்க! எனினும் இங்கு நஞ்சை கரம்பாகிறது—கரம்பு கள்ளிகாளான் படரும் இடர்மிகு இடமாகிறது. பச்சை மாமலைகளும், பளிங்கன்ன நீரோடைகளும்,