பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/179

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

177

ஆதிக்கத்தின் ஒரு ‘கூறு’தான் என்று கூறிட முன்வந்திருப்பார்களா என்பதும் சந்தேகமே!

ஒன்றுபட்டு, தமிழகம் தன் உள்ளக் கொதிப்பை எடுத்துக்காட்டும் வாய்ப்பே ஏற்படவில்லை.

கலை, கல்வித்துறை பற்றிய பிரச்சினை நம்முடையதல்ல என்று மற்றவர்களும், எல்லை, உரிமை, என்பன அரசியல்வாதிகளின் ஆயாசப் பேச்சு என்று கலை கல்வித் துறையினரும், வாணிபம், இலாப வேட்டைக்காரர் பிரச்சினை, இதில் நமக்கென்ன அக்கரை என்று பிற துறையினரும், இவ்விதம், ஒவ்வொருவர் ஒவ்வோர் ‘முனை’யில் மட்டும் பார்வையைச் செலுத்திக் கொண்டு, பிற பிரச்சினைகளில் கருத்தைச் செலுத்துவதே தேவையில்லை என்று எண்ணும் போக்குக் காண்கிறோம். அதுமட்டுமல்ல; இவர் ஒவ்வொருவரும், எதற்கும் ‘பிள்ளையார் சுழி’ போடுவது என்பார்களே, அதுபோல, டில்லியின் போக்கைக் கண்டிக்கக் கிளம்பும்போதே, எமக்கு இந்தியா ஒரு நாடு என்பதிலோ, இந்தியர் ஓர் இனமக்கள் என்பதிலோ, ஐயம் இல்லை. நாங்கள், நாடு துண்டாடப்பட வேண்டும் என்ற தீய கொள்கை கொண்டோரல்ல! இந்தியாவின் ஐக்யமே, எமது பேச்சு, மூச்சு என்ற ‘துதி’ பாடிவிட்டுத்தான், தமது கண்டனத்தை வெளியிடுகின்றனர். இப்படிப்பட்ட ‘அடக்கமான’வர்களுக்கே, டில்லி வழங்குவது, மிரட்டல், விரட்டல்!

எத்தனை காலத்துக்கு, எத்தனை பிரச்சினைகளுக்கு, இப்படி இருகரம் கூப்பி, ஐயா! ஐயா! என்று இறைஞ்சி நின்று, இடியும் கடியும் பட்டுத் தீரவேண்டும் என்று இவர்கள் எண்ணுகிறார்கேளா, தெரியவில்லை.

தம்பி, ஒன்று புரிகிறது. இன்று எனக்கு வந்த தபாலில், டில்லியிலிருந்து வெளியாகும், இந்துஸ்தான் டைம்ஸ் இதழிலிருந்து ஒரு துணுக்கு வெட்டி அனுப்பி வைத்திருந்தார் ஒரு நண்பர். இந்த இதழ் மகாத்மாவின் புத்ரரும் ஆச்சாரியாரின் மருகருமான தேவதாஸ் காந்தியை ஆசிரியராகக் கொண்டது.

இடியும் கடியும் பொறுத்துக் கொண்டு, வலியையும் வெளியே தெரியவிடுவது நாகரிகமல்லவென்று கருதிக்கொண்டு, கரம் கூப்பிச் சிரம் தாழ்த்தி, கண்ணீர் பொழிந்து கனிவு பெறலாம் என்று காத்து நிற்போர் மட்டுமல்ல, தமிழகத்தில் விளைவு விபரீதமாகுமோ, அடக்குமுறை அவிழ்த்துவிடப்படுமோ என்பது பற்றிய அச்சமற்று, வடநாட்டு ஆதிக்-