183
தலைமுறை தலைமுறையாக வளர்ந்து நமது குருதியுடன் கலந்துள்ள தாய்நாட்டுப் பாசத்தை, ஒரு உத்தரவு பிறப்பித்து ஒழித்துவிட முடியும் என்று எண்ணுகிறார்களே, இவர்களை என்னென்று கூறுவது!
சின்ன வயதிலே சந்தைப் புறத்திலே காணாமற்போய்விட்ட குழந்தை, வேற்றாரிடம் வளர்ந்து, பெரியவனானாலும், பிறகோர் நாள், உண்மை தெரிந்ததும், தாயின் பாதத்தைத் தன் கண்ணீரால் கழுவிடக் காண்கிறோம்—கதைகளில்! தலைமுறை தலைமுறையாக தொல்காப்பியரும், வள்ளுவரும், இளங்கோவும், காக்கைப்பாடினியாரும், சீத்தலைச் சாத்தனாரும், கோவூர் கிழாரும், கணியன் பூங்குன்றனாரும், கபிலரும், திருத்தக்கரும், நக்கீரரும், நாகனாரும், நச்செள்ளையாரும், (மற்றவர் பற்றிய முறையான பெயர் வரிசையை நமது நாவலரிடம் கேட்டுப் பெறுக) ஊட்டி வளர்த்து, உருவாக்கி வைத்துள்ளதை, ஊராளவந்தவர்கள் உத்தரவு போட்டு உருக்குலைத்துவிடுவதாமே! இப்படியொரு ‘உற்பாதம்’ நேரிட விடலாகுமா!
எனவேதான் தம்பி, பாரத நாடு—இந்தியா—இந்தியர்—என்று இவர்கள் இட்டுக்கட்டி இதுகாலை திணிக்க விரும்பும் போலித்தேசீயம், முளைவிட மறுக்கிறது. நீண்ட நெடுங்காலமாக நமது பரம்பரைக்குக் கிடைத்து, கண்ணீரும் செந்நீரும் வியர்வையும் அதற்கு அளித்து, செழிப்புறச் செய்து, எந்த இயல்பு—தாய்நாட்டுப்பற்று தேசீயம்—நம்மிடம் குருதியிற் கலந்திருக்கிறதோ, அதனை அழித்திட முற்படுவது அறிவீனம் என்பது மட்டுமல்ல, ஆகாத காரியம், அடாத செயல் என்பதுடன், இவர்கள் எக்காரணம்பற்றியோ வெற்றிநிலை எய்தினாலும், இவர்கள் பிடியில் சிக்கிவிட்ட மக்கள், இருந்ததையும் இழந்து, புதியதோர் இயல்பும் பெறாமல், ஏதுமற்றவர்களாக, பட்டியில் மாடென உழல வேண்டி நேரிடுமேயன்றி, எமது! எம்மவர்! எமது இயல்பு! எம்வீரர்! எமது புலவர்! எமது நெறி! என்று கூறிப் பெருமைப்பட, அறிவாற்றல் பெறமுடியாததோர் நிலை பெறுவர்! நாடு இருக்கும், அதிலே மக்கள் இருப்பர்—ஆனால் இரண்டினையும் ஒன்று ஆக்கிடும் பாசம்—பற்று—தேசியம்—இருக்காது!! வீட்டிலே இருக்கும்போது, நம்முடன் இருப்போரைவிட, அதிகமான அளவில்தான் ஆட்கள் இருக்கிறார்கள் இரயில் பயணத்தில். வீட்டிலே காணப்படுவதைவிட சிற்சில வேளைகளிலே இரயிலில் குதூகலமும் கூடக் காணப்படும்—எனினும் அதிலே செல்லும் எவரும்—இரயிலைத் தமது வீடு என்று கொள்வதில்லையே!! சிறு குடில் எனினும், அதனிடம் ஏற்படும் பாச உணர்ச்சி, புதுமெருகுடன் கூடியதாக இருப்பினும், இரயி-