பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/186

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

லிடம் ஏற்படுகிறதா!! புதிய போதகர்களோ, குடிலையும் அழித்துவிடுங்கள், நாங்கள் அமைந்திருக்கும் கூடாரத்தை உமது மனையென்று கொள்ளுங்கள் என்கின்றனர்! முடியாது ஐயன்மீர், ஏனெனில் அது முடியக்கூடிய செயலல்ல என்கிறோம். விடாதே! பிடி! சிறையில் அடை! என்று இந்துஸ்தான் டைம்ஸ் கொக்கரிக்கிறது!

இதிலிருந்து தம்பி, நான் துவக்கத்தில் எடுத்துக்காட்டியபடி, அங்கு வரையில், நமது கழகம் மணம்பரப்பிவிட்டிருக்கிறது என்ற பேருண்மை தெரிகிறது.

இதுபோல, எங்கும் நமது கழகநிலை தெரிந்திட வேண்டும் என்பதற்காகவேதான் தம்பி, நானும் துணிந்து ஆங்கிலக்கிழமை இதழ், ஜனவரித் திங்களிலிருந்து வெளியிடுவது என்று ஏற்பாடுகளைத் துவக்கிவிட்டேன். சென்ற ஆண்டு, எப்படியும் இந்த இதழ் துவக்கி நடத்துவது என்று, ஏற்பாடுகளை என் நண்பர் S S. P. லிங்கம் அவர்களைக்கொண்டு துவக்கினேன். அவரும் மிக ஆர்வத்துடன் பணியாற்றினார்—ஆனால், என் சுபாவம்தான் உனக்குத் தெரியுமே, புதிய பொறுப்பாயிற்றே! எப்படி இதனையும் கவனித்துக்கொள்வது! என்ற அச்சம் குடைந்தது. மெத்தச் சமாதானம் சொல்லி, நண்பர் லிங்கத்தை, இப்போதைக்கு வேண்டாம், பிறகு பார்ப்போம் என்று கூறினேன். இப்போது சென்னையிலிருந்து நடத்துவதைவிட காஞ்சியிலிருந்து வெளியிடுவது, சிறிதளவு வசதி தரும் என்ற எண்ணத்துடன், ஏற்பாடுகள் செய்துவருகிறேன். தம்பி! நான் அதற்காகக் கேட்கும் ஆதரவு — நன்கொடை அல்ல - துவக்கத்திலேயே எனக்குத் தெம்பும் தைரியமும் வருவதற்காக, ஆயிரம் சந்தா தேவை என்று கேட்டேன்.

நான் இதுபோலக்கேட்கும்போது, தம்பி, நீ மட்டுமல்ல கேட்டுக்கொண்டிருப்பது.

மாற்றுக் கட்சியினர் கேட்டுக் கொண்டுள்ளனர்; சர்க்காரும் உற்றுக் கேட்கிறது.

என் வேண்டுகோளைத் தம்பி, நீ அன்புடனும் அக்கரையுடனும் நிறைவேற்றி வைத்தால், உனக்கும் எனக்கும் உள்ள உறவு எவ்வளவு உயர்தரமானது என்பதை அறிவதுடன், நமது கழகத்துக்கு எத்துணை செல்வாக்கு இருக்கிறது, காரியத்தை வெற்றிகரமாக்கும் ஆற்றல் நமது கழகத் தோழர்களிடம் எவ்வளவு இருக்கிறது என்பதை, மாற்றுக்கட்சியினரும், சர்க்காரும் அறிவர்!