பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

இதுபோன்ற தொழிற்சாலை பெரிய அளவில், வேறு எங்கும் இல்லை.

இதற்கு கனரகத் தொழிற்சாலை ரசாயனப் பொருள் உற்பத்திக் கம்பெனி; அமைக்கப்பட்டது. மூலதனம் ஒரு கோடி ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டது.

1953ம் ஆண்டில், இந்த ஒரு கோடி ரூபாய் கம்பெனியின் துவக்கவிழா விமரிசையாக நடந்தேறியது.

துவக்க விழா நடத்தினவர் மைசூர் மகாராஜா!!

தம்பி! இப்போது அந்தத் தொழிற்சாலை இயங்கவில்லை!!

அது குறித்தே இந்தத் துயரகீதம் வெளிவந்திருக்கிறது.

ஒரு கோடி ரூபாய் முதல் திரட்டி, நடத்தத் திட்டமிட்டு மும்முரமாக ஆரம்ப வேலைகளை நடத்தி வெற்றி பெற்று, 17 இலட்ச ரூபாய் வரையிலே பங்குத் தொகை திரட்டிவிட்டனர். சென்னை சர்க்காரும், 10 இலட்ச ரூபாய் அளவுக்கு இந்தத் தொழிற்சாலையில் பங்கு எடுத்துக்கொள்வதாக வாக்களித்தது.

இங்ஙனம் நிபுணர்களின் ஆதரவைப் பெற்று, பிரமுகர்களின் ஆசியைப்பெற்று, துவக்க விழாவிலே மைசூர் மகாராஜாவின் வாழ்த்துகளைப் பெற்றுத் துவக்கப்பட்ட தொழிற்சாலை, இன்று மூடுவிழாவுக்கு முகூர்த்தம் பார்க்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டிருக்கிறது! “ஏன் என்று நிதி அமைச்சரைக் கேள் தம்பி, ஏனா? உங்களால் முடியவில்லை! உங்கள் தெற்குக்கு அவ்வளவுதான் யோக்யதை!” என்று கொதித்துக் கூறுவார் ஆனால் அவருக்கும், உண்மை விளங்கினால், கோபமல்ல, கண்ணீர் வரும்.

தொழிற்சாலை அமைப்புக்காக நூறு ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது; பாதைகள், பாதை ஓரத்தில் மரம் செடி கொடிகள், காரியாலயக் கட்டிடங்கள், அவைகளைச் சுற்றி கிராதிகள், காம்பவுண்டுகள், வேலிகள், தோட்டங்கள், யாவும் கட்டப்பட்டன.

சுவிட்சர்லாந்து நாட்டு விஞ்ஞானத் தொழில் நிபுணர்களின் கூட்டுறவு கேட்டுப் பெறப்பட்டது.

கிரெப் கம்பெனியார், இதற்கான இயந்திரம் தரவும், தொழிற்சாலையில் பணியாற்றவும் இசைந்ததுடன், தங்கள் பங்குத் தொகையாக 6-இலட்ச ரூபாய் அளிக்கவும் ஒப்புதல் அளித்தனர்.