பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/192

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

நடத்துவது என்று திட்டமிட்டுத் துவக்கப்பட்ட இந்தத் தொழிற்சாலையின் வளர்ச்சிக்காக ஒரு முறையும் வகுத்தனர்.

முதல் தவணை-அல்லது முதல் கட்டம் ஒன்று; இந்த முதல் கட்டத்தில் நாளொன்றுக்கு ஐந்து டன் சோடா உப்பு தயாராகும் அளவு வேலை நடத்துவது என்றும், ஐந்தாண்டுகள் இம்முறையில் வேலை செய்தான பிறகு, தினசரி பத்து டன் சோடா உப்பு தயாராகத்தக்க விதத்தில் தொழிற்சாலையை விரிவுபடுத்துவதென்றும், முறை வகுத்துள்ளனர்.

தென்னாட்டிலே தொழில் வளம் ஏற்படவில்லை என்பதை அமைச்சர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்! வேண்டுமென்றே தென்னாடு புறக்கணிக்கப்படவில்லை; ஓரவஞ்சனை நடைபெறவில்லை என்று சமாதானம் கூறுகின்றனர். தென்னாட்டிலே தொழில் நடத்த, பணம் படைத்தோரும், பணத்தைத்திரட்டக்கூடியவர்களும் முன் வரவேண்டும் என்று யோசனை கூறினர்; டாட்டா, பிர்லா என்றுகூறி வயிற்றெரிச்சல்பட்டு என்ன பிரயோஜனம், உங்களுடைய அழகப்பாக்களை அழைத்துத் தொழில் நடத்தச் சொல்லுங்களேன் என்று கேலி பேசினர். அவ்விதம் புதிய தொழில்கள் துவக்கப்பட்டால் துரைத்தனம் வரவேற்கும், ஆதரவு அளிக்கும் என்று வாக்களித்தனர். இதனைக் காங்கிரஸ் பேச்சாளர்கள் நமக்கு அவ்வப்போது எடுத்துக்காட்டியும் வருகின்றனர்.

இப்போது, நடைபெற்று வரும் வேடிக்கையைக் கேள், தம்பி! கேள்!

இவ்வளவு வேலைகள் நடந்தான பிறகு—அதற்காகப் பல இலட்சம் செலவான பிறகு—மைகுர் மகாராஜாவின் திருக்கரத்தால் அஸ்திவாரம் அமைத்து, புதிய தொழிற்சாலைக்கான துவக்க ஏற்பாடுகள் பல செய்து முடித்து, நிபுணர்களை நியமித்து, வேலையைத் துவக்கியான பிறகு, இந்திய சர்க்கார் இந்தத் தொழிற்சாலை, தகுந்தபடி நடத்தப்படுமா என்பதிலே எமக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது, என்று ஒரு ‘கரடி’யை அவிழ்த்துவிட்டிருக்கிறது.

நாளொன்றுக்கு 5-டன் சோடா உப்பு தயாராகும் என்கிறீர்களே—இதுதான் உமது உற்பத்தியின் அளவு என்றால், கட்டிவராதே, தொழிலில் இலாபம் வராதே, வீண் கஷ்ட நஷ்டமல்லவா ஏற்படும்—இந்த நிலையில், புதிய தொழிற்சாலையை ஏன் கட்டிக் கொண்டு மாரடிக்கிறீர்கள்—விட்டுத் தொலையுங்கள் என்று இந்திய சர்க்கார், தமது மேலான, ஆலோசனையைக் கூறுகிறது.