192
வரும், பணம் விரயமாகாது, உழைப்பு வீண்போகாது என்றெல்லாம் எடுத்துக்காட்டினர்.
இந்தச் சமாதானத்துக்கு, விளக்கத்துக்கு, இந்திய சர்க்கார் மறுப்பும் தரவில்லை, தமது பழைய புகாரையும் விட்டுவிடவில்லை.
தம்பி! நட்டாற்றில் விடுவது என்கிறார்களே, இது வேறு என்ன?
தூங்கும்போது கல்போடுவதும், துவக்கிட அனுமதி தந்து, வேலைகள் மளமளவென்று வளர்ந்திடும்போது, ‘கட்டை’ போடுவதும் வேறு வேறா!!
எண்ணிப் பார்க்கச் சொல்லு, நம்மை எல்லாம் பேதம் பிளவு பேசுவோர் என்று எண்ணிக்கொண்டு நிந்திக்கிறார்களே, காங்கிரஸ் நண்பர்கள், அவர்களை!
இத்துடன் இந்தச் சோகக் காதை நின்றுவிடவில்லை. இதுபோதும், வேதனையைக் கிளற, கதர்ச்சட்டையைக் கழற்றி எறிந்துவிட்டு கழகத்தில் சேர! எனினும், மேலும் நடந்திருக்கும் ‘வேலை’யையும் கூறுகிறேன், கேள், தம்பி.
1953-ல் ஆதாரம் காட்டி, அவசியத்தை வலியுறுத்தி, புள்ளி விவரம் காட்டி, நிபுணர்களின் ஒப்புதலைத் காட்டி, இந்தத் தொழிற்சாலை அமைக்க அனுமதி பெற்றனர்.
1955-ல் தூத்துக்குடிக்கு அருகேயே, இது போன்ற வகையான புதிய தொழிற்சாலை அமைக்க, வேறோர் தரப்பினருக்கு, இந்திய சர்க்கார் அனுமதி அளித்தனர்.
1953-ல் அனுமதி அளித்து வேலையைத் துவக்கிய தொழிற்சாலை, உற்பத்தி செய்யும் அளவு போதாது என்பதைக் கண்டான பிறகு, மேலும் உற்பத்தியை அதிகமாக்கும் வழி அந்தத் தொழிற்சாலைக்கு இல்லை என்பதைக் கண்டறிந்த பிறகு, மற்றோர் தொழிற்சாலைக்கு அனுமதி தந்தனரா இந்திய சர்க்கார்? இல்லை, தம்பி, இல்லை.
1953-ல் துவக்கப்பட்ட தொழிற்சாலை, உற்பத்தி செய்திடும் நிலைக்கு வரவில்லை—முயற்சி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தச் சமயத்திலே, அதே வட்டாரத்தில் வேறோர் தொழிற்சாலைக்கு அனுமதி அளிப்பது ஏன்?
நீதியும் நியாயமும் மடிந்திடக்கூடாது என்ற நல்லெண்ணம் கொண்ட எவரும், அவர் எந்தக் கட்சியில் இருப்பினும், கேட்க வேண்டிய கேள்வி அல்லவா இது? கேட்பார்களா?