பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

193

1953-ல் அனுமதி அளித்தது, சோடா உப்பு தயாரிக்க! 1955 ல் புதிய தொழிற்சாலைக்கு அனுமதி அளித்திருக்கிறோம். என்றால், அது சோடா உப்பு தயாரிக்க அல்ல, சோடா சாம்பல் தயாரிக்க!—என்று சமாதானம் கூறிட சர்க்காருக்கு மனம் இடம் தருகிறது.

தம்பி! பெயர் ஒன்றுக்கு சோடா உப்பு—Caustic Soda—மற்றொன்றுக்கு Soda Ash—சோடா சாம்பல் என்று இருக்கிறதே தவிர, தொழில் முறை, உற்பத்தி வகை ஆகியவை ஒரேவிதம்தான்! எனினும், சர்க்கார் நடத்திய இந்தத் திருவிளையாடலை, சொற்சிலம்பம் செய்து மறைத்திட முயற்சிக்கிறது!

பல் ஆஸ்பத்திரிக்குப் போவானேன்—பல ரூபாய் பாழாக்கிக் கொள்வானேன் என்பதற்காகத்தான், நாலைந்து அறை கொடுத்து இவனுடைய பற்கள் கீழே உதிர்ந்திடச் செய்தேன் என்று போதையில் உள்ள காலிகூடப் பேசமாட்டான். பொறுப்பு அறிந்த சர்க்கார், பொன்னாடாக இருந்த தென்னகம் தேய்ந்திருக்கிறது, மீண்டும் இங்கு திருவும் தெம்பும் ஏற்படப் புதிய தொழில்களை அமைத்தாக வேண்டும் என்ற நோக்கத்துடன் பணியாற்ற வேண்டிய சர்க்கார்,

உங்கள் தொழிற்சாலை, ‘கட்டி வரக்கூடிய’ முறையில் இல்லை என்று நாங்கள் கருதுவதால், இது நடைபெறுவதைக் குறித்துப் பலமாகச் சந்தேகப்படுகிறோம் என்று சாக்குக் கூறிவிட்டு, இது போன்ற வகையினதாகவே வேறோர் தொழிற்சாலை நடத்த, மற்றொருவருக்கு அனுமதி அளித்திருக்கிறது.

இதனை அறம் என்று கூற, யார் முன் வருவர்?

இதனை நேர்மையான அரசியல் என்று கூறும் துணிவுகூட எவருக்கும் எழாதே!

1953-ல் ஏற்பட்ட தொழிற்சாலை Caustic Soda தயாரிக்க; 1955-ல் அனுமதி பெற்றிருப்பது Soda Ash தயாரிக்க என்று சொல்லை வைத்துக்கொண்டு ‘ஜாலம்’ செய்தார்கள்!!

உன் கடையில் இட்லி சாம்பார்! அவன் கடை உன் கடைக்குப் போட்டியாக நான் கிளப்பிவிடுவது என்று எண்ணிக் கொள்ளாதே, அவன் கடையில் இட்லி சட்னி தான், சாம்பார் கிடையாது, என்று சொன்னால், அதற்குப் பெயர் சமாதானமா!!

சிலநாள் தான் இந்தப் போலிவாதம் கூட!