19
“திருப்பரங்குன்றத்தில் தங்களைக் குப்புறத் தள்ளியதற்காகக் கன்னத்தில் போட்டுக்கொள்கிறோம். திராவிடர்களாகிய எங்களில் யாருக்கும் தலைமைப்பதவிக்கான தகுதி கிடையாது. நாங்களெல்லோரும் அடி முட்டாள்கள். நெல்லிக்காய் மூட்டைகள் உதவாக்கரையான சுரைக்காய் குடுக்கைகள். தங்கள் திருப்பாதங்களைக் கண்ணில் ஒத்திக் கொள்கிறோம். தயவு கூர்ந்து கருணை புரியுங்கள். மீண்டும் பதவியேற்று எங்களுக்கு நல்லபுத்தி கற்பியுங்கள்”
என்று கூறுவதுபோல, அவர் வீட்டுக்கு நூறுதடவை காவடி தூக்கி மண்டியிட்டு வணங்கி, தோள்மீது சுமந்துவந்து தலைமைப் பீடத்தில் அமர்த்திவிட்டனர்.
தோழர் காமராசர் கோவை சுப்ரமணியத்திடம் கூடவே இருப்பது போல நடித்து, இறுதியில் அவரைக் கவிழ்த்து விட்டு, ஆச்சாரியாரிடம் அடைக்கலம் புகப்போகிறார் என்று ஒரு வாரத்துக்கு முன்பே பல முக்கிய நண்பர்கள் பேசிக் கொண்டனர். அது தவறு என்று கருதினோம். ஆனால் இன்று உண்மையாகிவிட்டது!!
எனவே, திருவில்லிப்புத்தூரில் எந்தக் காமராஜர் தெரிந்தாரோ அவரேதான், பிறகும் தெரிகிறார்—விடுதலையின் கண்ணோட்டத்தின்படி.
காங்கிரஸ் கட்சியின் கண்ணியத்தையும் செல்வாக்கையும் காப்பாற்றுவதற்காக, சொந்தத்தில் இருந்துவந்த பகையையும் மறந்தது பெருந்தன்மையல்லவா! சொந்தத்தில் ‘மானாபிமானம்’ பார்த்துக்கொண்டு, கட்சி எக்கேடோ கெட்டுப் போகட்டும் என்று அவர் இருந்துவிடவில்லை, இதிலிருந்தே அவர் எவ்வளவு நேர்மையுணர்ச்சி கொண்டவர், கட்சிப்பற்றுக் கொண்டவர் என்பது தெரியவில்லையா?
காங்கிரசுக்குள்ளேயோ பிளவு இருக்கிறது—காமராஜ் காங்கிரஸ்—ராஜாஜி காங்கிரஸ் என்று கோஷ்டிச் சண்டை இருக்கிறது, கோட்டைக்குள்ளே குத்தும் வெட்டும் இருக்கும்; இந்தச் சமயம்தான் அந்தக் கட்சியை ஒழித்துக்கட்ட ஏற்றது என்று காங்கிரஸ் விரோதிகள் எண்ணுவார்கள், இதற்கு நாம் இடமளிக்கக்கூடாது, நமக்கும் இராஜகோபால ஆச்சாரியாருக்கும் சொந்தத்தில் ஆயிரத்தெட்டு விரோதம் இருக்கலாம், அதற்காகக் காங்கிரசுக்குக் கேடுவர சம்மதிக்கக் கூடாது, இப்போது நாம் எப்படியாவது ஆச்சாரியார் துணையைப் பெறவேண்டும் என்று எண்ணிக் காரியமாற்றியது மிகத்திறமையான இராஜதந்திரமல்லவா?