பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

பாராதே, காசு எவ்வளவு தருவார்கள் என்று கேளாதே, பகவானுக்கு நாம் சேவை செய்கிறோம் என்ற எண்ணத்தோடு வேலை செய், வேல்முருகன், உனக்குத் தக்க சமயத்தில் தக்க விதமாக அருள்பாலிப்பார், என்று திருப்புகழ் பஜனைக் கூடத்தாரும், கோயில் தர்மகர்த்தாவும் கூறினர்; அவர்களெல்லாம் மெத்தப்படித்தவர்கள், அவர்கள் கூறுவது சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை கந்தப்பனுக்கு. எனவேதான், கை தழும்பேறியதைக் கவனியாமல், சுளுக்கு ஏற்பட்டு உயிர் துடிக்கும் விதமான வலி உண்டாகும் அளவுக்கு, சந்தன அரைப்பு வேலையைச் செய்திருக்கிறான்.

முருகனுக்குச் சந்தனக் காப்பு நடைபெற்றது, சன்னதியே நறுமணம் பெற்றது.

பக்தர்கள் சந்தனப் பிரசாதம் பெற்றனர்—மகிழ்ந்தனர். கோயில் நிருவாகத்தினர், வரவு செலவு கணக்குப் பார்த்தனர். நல்ல ஆதாயம், எனவே, மிகுந்த மகிழ்ச்சி அவர்களுக்கு. அவர்களின் இல்லங்களிலெல்லாம் சந்தன மணம் கமழ்ந்தது! கந்தப்பன் வீட்டிலேயோ, எருக்கம்பால் வாடை மூக்கைத் துளைத்தது. கந்தப்பன் அரைத்துக் கொடுத்த கலவைச் சந்தனம், பலருடைய உடலுக்கு அழகும் மணமும் அளித்தது கந்தப்பன் உடலில், களிமண் பூசப்பட்டிருக்கிறது. எருக்கம்பால், தடவி இருக்கிறார்கள்; மூதாட்டி ஒருத்தி சொல்லிவிட்டுப் போயிருக்கிறாள், “இதெல்லாம் எதுக்கு? பசுமாட்டுச் சாணியைக் கொதிக்கவைத்துத் தடவு, நோய் பட்டுன்னு விட்டுப்போகுது” பாரு என்று.

இந்திய சர்க்காருக்கும் தம்பி, மக்கள், கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டிக் கொடுத்துவிட்டு, கைசுளுக்குக்கு எருக்கம்பால் தேடிடும் கந்தப்பன் போல, தங்கள் வாழ்க்கை வசதிக்கு, தகுந்த அளவும் வகையும் பொருள் கிடைக்காமல், திண்டாடித் தேம்புகிறார்கள்.

சந்தனம் அரைத்துக் கொடுத்ததால் உண்டான வலி தீர்ந்தால் போதும் என்ற நிலையில், கந்தப்பன் இருப்பதுபோல, நாளுக்கு நாள் ஏறிப் பாரமாகிக்கொண்டு வரும் வரித்தொல்லையைத் தாங்குவதற்காவது வலிவு வேண்டுமே, அதை எப்படிப் பெறுவது என்று, ஏழை மக்கள் ஏங்கித் தவித்துக் கிடக்கிறார்கள்.

சந்தனக் காப்பு உற்சவம், பார்க்கப் பதினாயிரம் கண் வேண்டும் என்று பக்தர்கள் பரவசத்துடன் கூறுவதுபோல,