பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

நெக்குருகப் பேசுகிறார்களே தவிர, உள்ளூர அவர்களுக்கு சர்வோதயத்திலே நம்பிக்கை கிடையாது; சர்வோதயம் பேசிக்கொண்டு அவர்கள் அங்கே சர்க்கரை ஆலை வேண்டாம் கருப்பட்டி போதும், நூலாலை வேண்டாம் சர்க்கா போதும், காகித ஆலை வேண்டாம் பனை ஓலை போதும், மோட்டார் தொழில் வேண்டாம், கட்டை வண்டி போதும், டிராக்டர் வேண்டாம் ஏர் எருது போதும், என்றெல்லாம் இருந்துவிடுகிறார்கள் போலும் என்று எண்ணி ஏமாந்து விடாதீர்கள். நாமும் இங்கு சர்வோதயம் காண்போம் என்று மனதார நம்பி வளர்ச்சியைக் குலைத்துக்கொள்ளாதீர்கள்; வடக்கே உள்ளவர்கள் பேச்சிலேதான் சர்வோதயம்; ஆனால் நடைமுறையிலோ, நவீன அமெரிக்க யந்திரங்களைத்தான் வரவழைக்கிறார்கள்.

அவர்களுடைய இந்தக் கபடத்தை நான் கண்ணால் கண்டேன்—ஏமாறாதீர், என் நாட்டவரே! அவர்களின் சொல்வேறு, செயல் வேறு! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகிறார்கள்!

குமாரசாமிராஜாவின் பேச்சிலே இவ்வளவும், எண்ணிப் பார்க்கப் பார்க்க, இதனினும் அதிகமாகவும், பொருள் பொதிந்திருக்கக் காண்கிறேன்.

சர்வோதயம் பேசுகிறீர்களே! இப்படி நவீன யந்திர மோகம் கொண்டு அலைகிறீர்களே! - என்று ராஜா, வடக்கே இடித்துக் கூறவில்லை, தம்பி, இங்கு நமக்கு எச்சரிக்கை செய்கிறார், சர்வோதயம் பேசும் வடநாட்டார் தங்கள் தொழிலில் பழைமையின் சாயலைக்கூட வைத்துக்கொண்டில்லை, எல்லாம் அமெரிக்க யந்திர மயமாக இருக்கிறது; உண்மையை அறியாமல், அவர்கள் உதட்டசைவு கேட்டு, மயங்கிவிடாதீர்கள்; சர்வோதயம், பேச்சு; செயல், நவீனம், நவயுகம் அமெரிக்க முறை!—என்று எடுத்துக் கூறுகிறார்.

தம்பி! பலமுறை பார்த்து, மிகவும் மனம் புழுங்கி, நீண்ட காலம் மறைத்துப் பார்த்து, கடைசியில் இனியும் நாமறிந்த இந்த உண்மையை நமது மக்களுக்கு எடுத்துக்கூறாமலிருப்பது, மக்களுக்கு நாம் மனதறிந்து செய்யும் துரோகமாகும் என்று உணர்ந்து, என்ன நேரிட்டாலும் கவலை இல்லை, நேருவுக்கு கோபம் பீறிட்டுக்கொண்டு வந்தாலும் பரவாயில்லை என்று துணிந்து, பேசின பேச்சு என்றே நான் இதனைக் கொள்கிறேன்.