43
அணு குறித்து அனைவரும் அறிந்துகொண்டுள்ளனர், அத்துணை எளிது, அதன் தன்மையை அறிதல் என்று எண்ணும்படிச் செய்துவிடுகிறார்களோ, அது போன்றே, இந்த ஆனால், ஆகவே எனும் இரு சொற்கள் குறித்தும், ஒருபோக்குக் காட்டப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்ல, இந்த ஆனால், ஆகவே எனும் இரு சொற்களையும், ‘அசை’க்குப் பதிலாகப் பயன்படுத்துவோரும் நிரம்ப உள்ளனர்!
ஏதேது, அண்ணா! தமிழ் இலக்கணம் பேசுவது போன்ற போக்குக் கொண்டு, தமிழ் ஆசிரியர்களின் ‘ஓட்டுக்களை’ப் பறிக்க முயலுகிறாயா? என்று, தம்பி, நீ கேட்க மாட்டாய் — என்னிடமும் உன்னிடமும் கடுப்புள்ளவர் பேச்சல்லவா, அது
நான், தமிழ் இலக்கணம் குறித்து அல்ல இதனை எழுதுவது — எனது இரு தமிழ்ப் பேராசியர்களும் — மணி திருநாவுக்காசு, மோசூர் கந்தசாமியார், இருவரும் வெகுபாடுபட்டனர், எனக்கு இலக்கணம் கற்பிக்க. நான் தமிழின் இனிமை பற்றி மட்டுமே அறிந்துகொள்ள முடிந்தது. இலக்கணப் பயிற்சியில் என்னை வெற்றிபெறச் செய்வதிலே, எனது இரு ஆசிரியர்களுய் வெற்றிபெறவில்லை. ஆகவே... பார், பார், தம்பி! மீண்டும் அந்த ஆகவே வந்து ஒட்டிக்கொள்கிறது! அடா, அடா, இந்த இரு சொற்களும், பொதுவாழ்வுத்துறையினரின் நாவிலே இருந்துகொண்டு, அவர்களையும் அவர்களிடம் தொடர்புகொண்ட பொது மக்களையும், படுத்தும்பாடு இருக்கிறதே, தம்பி, சொல்லுந்தரத்ததல்ல.
ஒரு பிரச்சினையை விளக்கிக் கொண்டே போகிறார் ஒரு தலைவர் என்று வைத்துக்கொள் – ஏன் வைத்துக்கொள் என்று தயவாகக் கேட்டுக்கொள்கிறேன் என்றால், இப்போதெல்லாம் பிரச்சினைகள் விளக்கப்படுவதில்லை, புகுத்தப்படுகின்றன, புதிராக்கப்படுகின்றன! எல்லாத் தலைவர்களுமா அவ்விதம் என்றால், தம்பி, பெரும்பாலோர் இம் முறையைத்தான் கையாள்கிறார்கள் — வேறு சிலர், நல்ல விளக்கம் தருகிறார்கள், ஆனால் பிரச்சினைகளுக்கு அல்ல — இந்த நிலைமை இருப்பதனால்தான் பிரச்சினையை விளக்குவதாக வைத்துக்கொள் என்று தயவு கோரும் தன்மையில் கேட்டுக்கொண்டேன் — இனிக்கேள், பிரச்சிளையை விளக்கியானதும், ஆனால், அல்லது ஆகவே எனும் இரு சொற்களும் துள்ளிக் குதித்து வந்து நிற்கின்றன—அந்தத் தலைவர், இந்த இரு சொற்களிலே, எதனைத் தன் பேச்சுக்கும், அதை அடுத்துத் தன் செயலுக்கும் துணையாகக் கொள்கிறாரோ, அதைப் பொறுத்துத்தான்,