44
சமுதாயத்துக்குக் கிடைக்கும் பலன் இருக்கிறது. இதைச் சொல்லத்தான் நான் இலக்கண பாடம் போன்ற முறை துவக்கினேன் — இலக்கணம் போதிக்க அல்ல.
நமது நாட்டிலே, இந்த இரு சொற்களுக்கிடையே கடுமையான போட்டி-தலைவர்கள் திணறும்படியான நிலை ஏற்பட்டுவிடுகிறது — கடைசியில் அவர்கள், ஆனால் போட வேண்டிய கட்டத்தில் ஆகவே யையும், ஆகவே என்று கூற வேண்டிய கட்டத்தில் ஆனால் என்று கூறியும், பிரச்சினைகளைப் பாழடித்து விடுவதைத்தான் பெரிதும் காண்கிறோம்.
நம் நாட்டிலேயே பல பிரச்சினைகளுக்கு, எத்துணையோ முயற்சிக்குப் பிறகும், தக்கதோர் பரிகாரம் கிடைக்காமற் போனதற்குக் காரணம், இந்த ஆனால் ஆகவே எனும் இரு சொற்களும், தலைக்குப் போட வேண்டியதைக் காலுக்கும் காலுக்குப் போடவேண்டியதைத் தலைக்கும் போட்டுக்கொள்ளும் அலங்கோலம்போலப் பயன்படுத்தப் பட்டுவிடுவதுதான் என்பதை, பல்வேறு அரசியல் சம்பவங்களையும் ஆய்ந்தறிந்தால், அறிந்துகொள்ளலாம்.
பொதுவாகக் கவனிக்கும்போது ஒரு உண்மை புலப்படும்; ஆனால்... என்றசொல், இழுப்பு, வழுக்கல், திகைப்பு, திணறல், அச்சம், தயை, தாட்சணியம் போன்ற மனப்போக்கின் விளைவாக முளைப்பதையும், ஆகவே எனும் சொல், உறுதிப்பாடு, செயல்படுதிறன், எழுச்சி, முயற்சி போன்ற போக்கிலே மலர்வதையும் உணரலாம், பெரிதும்.
எழுச்சி கொண்டோர்போல நடித்துவிட்டு, பிறகு வழுக்க விரும்புவோர், பிரச்சினைபற்றிப் பேசிக்கொண்டே வரும்போது; சரி சரி, பிரச்னையைக் காரசாரமும் வீரதீரமும் ததும்பும் வகையில் விளக்குகிறார் இந்தத் தலைவர், ஆகவே இந்த அக்ரமத்தை ஒழிக்க வேண்டும் என்று முழக்கமிடப் போகிறார் என்று கேட்போர் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருப்பர். ஆகவே என்று சொல்வதற்குப் பதிலாக அந்த அருந்தலைவர் ஆனால் என்று இணைப்புப் போட்டு, இழுப்புப் பேச்சில் இறங்கி, வழுக்கி விழுந்து, தமது அச்சத்தையோ, அல்லது தயவு தாட்சணியத்துக்குக் கட்டுப்பட்டு விட்ட தன்மையையோ காட்டிக் கொண்டுவிடுவார்.
இதோ ஓர் எடுத்துக்காட்டு—