45
சமதர்ம திட்டத்தைத்தான் மக்களாட்சியின் மாண்பறிந்த நாடுகளெல்லாம் ஏற்றுக்கொண்டுள்ளன.
பாரதமும் சமதர்ம திட்டத்தை ஆவடி காங்கிரசின்போதே, ஏற்றுக்கொண்டுவிட்டது.நேரு பண்டிதர், தமது ஆட்சியின் குறிக்கோள் யாது என்ற பிரச்சினையை இவ்விதம் விளக்குகிறார். மாம்பழத்தை, தோலைப் பதமாகச் சீவி எடுத்துவிட்டு, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிவைக்கிறார். மாம்பழத் துண்டு கிடைக்கப் போகிறது, சுவை பெறப்போகிறோம் என்றுதானே எவருக்கும் தோன்றும். கிடைக்கிறதா என்று பார், தம்பி.
பிரச்சினையை இந்த ஆர்வத்துடன் நேரு பண்டிதர் விளக்கிக் கொண்டு செல்வது கண்டு, என்ன எண்ணிக்கொள்வோம்.
விளக்கத்தின் இறுதியில் ஆகவே என்று வீரச்சொல் தந்து,
ஆகவே, இந்த நாட்டிலே தொழில்களை முதலாளிகளிடம் விட்டுவைக்கப் போவதில்லை. கொள்ளை இலாபக்காரனை விட்டுவைக்கமாட்டோம்.
உழைப்பவனை வாட்டி வதைத்து ஒரு சிலர் உல்லாச வாழ்வு நடத்துததற்கு அனுமதிக்கமாட்டோம்.என்றெல்லாம் நேரு பேசப்போகிறார், ஆர்வம் கொந்தளிக்கும், வீரம் வீறிட்டெழும் என்றுதானே எண்ணிக்கொள்வோம். அவரோ, பிரச்சினையை விளக்குவதிலே விவேகம் காட்டிவிட்டு, இறுதியாக உறுதிப்பாட்டைக் குறித்திடும் கட்டம் வந்ததும், ஆகவே என்ற சொல்லை, மெல்லச் சிரமப்பட்டுத் தள்ளிவிட்டு, ஆனால் எனும் இழுப்புச் சொல்லினை இழுத்தணைத்தபடி,
ஆனால் சமதர்மம் வெற்றி பெறுவதற்கு முதலாளிகளை ஒழித்தாக வேண்டும் என்பதில்லை.
தொழில்கள் தனிப்பட்ட முதலாளியிடம் இருக்கக்கூடாது என்று சட்டம் போடத் தேவையில்லை.
இலாபம் தேடுவோரைத் தடுக்கவேண்டும் என்பதில்லை.என்றெல்லாம் பேசுகிறர்.