பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

திகைத்து நிற்கிறோம், திணறிப் போகிறாம், சமதர்மத்திட்டமே திக்குத்தெரியாத காட்டிலே விடப்பட்ட சிறகொடிந்த பறவை போலாகிவிடுகிறது.

தம்பி, இந்தக் கட்டத்தில் மட்டும் ஆனால் என்ற அவலச் சுவை தரும் சொல்லைக் கொள்ளாமல், ஆகவே என்ற சொல்லை இணைத்துத் தம் ஆற்றலைக் காட்டினால் எத்துணை நன்மை கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்கும்போது, ஏக்கம் பிறக்கத்தான் செய்கிறது.

சூயஸ் கால்வாய் எகிப்தின் உடமை : அதனை நிர்வாகிக்கும் உரிமையை எழுச்சி பெற்ற எகிப்து நிலைநாட்டிக்கொண்டுவிட்டது — என்ற இந்த விளக்கத்தின் தொடர்ச்சியாக, ஆகவே, ஆனால் எனும் இரு சொற்களில் எது பயன்படுத்தப்படுகிறதோ அதைப் பொறுத்து, இன்றைய உலகப் போக்கே இருப்பதனை எண்ணிப் பார்த்திடும்போது, ஆனால் — ஆகவே எனும் இருசொற்களும் வடிவில் சிறியன, மகத்தான வலிவுடையன என்பதை அறிந்து கொள்ளலாம்.

சூயஸ்வரையிலே செல்வானேன், தம்பி, நமது குடும்பவிவகாரம் போதுமே. பெரியாரின் திருமணப் பிரச்சினை கிளம்பியபோது ஆனால் போட்டவர்கள் ஒரு சிலர், ஆகவே போட்டவர்கள் ஒரு சாரார் — திராவிடர் கழகம், திராவிடர் முன்னேற்றக் கழகம் எனும் இரு வடிவமே அல்லவா ஏற்பட்டு விட்டன!

தம்பி, சாமான்யமான சொற்களல்ல, இந்த, ஆனால் ஆகவே — என்பவைகள். மிகப் பொல்லாதன!!

தேவிகுளம் பீர்மேடு பிரச்சினையின்போது, அவை தமிழருக்கு உரியன என்பதற்கான காரணங்களை, வரலாற்று ஆதாரங்கள், புள்ளி விவரங்கள் ஆகியவற்றினைத் துணைகொண்டு நிதியமைச்சர் சுப்பிரமணியம் நேர்த்தியாகப் பேசினார், சட்டசபையில் — தேவிகுளம் இழந்தோம் — காரணம் என்ன? — இவ்வளவு பேசியவர், ஆகவே என்று ஆர்த்தெழவில்லை, ஆனால் என்று ஆமையானார்; சிறிது நாட்களிலே அந்தப் பிரச்சினையைப் பொறுத்தமட்டில் ஊமையுமானார்.

ஆகவே என்ற சொல் கொலுவிருக்கவேண்டிய கட்டத்தில், ஆனால் எனும் சொல் குடிபுகுந்தது; காடும் மலையும் கவினுற விளங்கிடும் தேவிகுளம் பீர்மேடு, நெய்யாற்றங்கரை போன்ற இடங்களை இழந்தோம்.

ஆகவே என்ற சொல்லினை அமைச்சர், அரியாசனத்தில் அமர்த்தியிருந்தால், தேவிகுளம் ஆகிய பகுதிகள் தமிழர்க்குக்