47
கிடைத்திருக்கும்-அமைச்சர் பதவி ஒருக்கால் அவருக்கு இல்லாது போயிருக்கும்!
தமிழர் வாழும் இடம் இது-தமிழரின் தாயகம் — ஆகவே தமிழ்நாடு என்றே பெயர் அமைதல்வேண்டும் என்று பெரியாரே கூறினார். அவருடைய பேரன்பைப் பெற்றுப் பெருமிதம் கொண்டுள்ள காமராஜரோ, ஆகவே இதற்குத் தமிழ் நாடு என்று பெயரிடலே பொறுத்த முடைத்து என்று கூறாமல், ஆனால், உலகில் சென்னை என்றால்தான் புரியும், சென்னை ராஜ்யம் என்றே பெயர் இருக்கும் என்று அறிவித்துவிட்டார். தமிழருக்குத் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் அணியும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.
ஆகவே இப்படிப்பட்டவரின் ஆட்சியை ஆதரிப்பது அறமாகாது என்றால்லவா தம்பி! நீ கூறுகிறாய். தமிழ்நாடு என்ற பெயர்கூட வைக்கத்தான் காமராஜர் முன்வரவில்லை, ஆனால் அவர் நல்லவர், நம்மவர், தமிழர், அவர்தான் மீண்டும், மீண்டும் ஆட்சி செய்யவேண்டும் என்றல்லவா பெரியார் சொல்கிறார்.
இதன்பயனாக அரசியல் நிலைமையும், போக்கும், எவ்வளவு எதிர்பாராதமுறையில் உருவாகிவிட்டது, உணருகிறாயல்லவா?
பொதுமக்கள் பேசுவதை சற்று உற்றுக் கேட்போம், வா, தம்பி,
பெரியார், தமிழ்நாடு என்று தான் பெயர் இருக்க வேண்டும் என்கிறார்.
ஆர்வத்தோடு சொல்கிறார் : எழுச்சியூட்டும் முறையில் எடுத்துரைக்கிறார்.
இந்தப் பெயர் கிடைப்பதற்காகப் பெரும்போரே நடத்துவேன் என்று எச்சரித்திருக்கிறார்.
காமராஜரோ, அதெல்லம் அர்த்தமில்லாத பேச்சு, அனாவசியமான ரகளை, வீணான குழப்பம், சென்னை ராஜ்யம் என்ற பெயர்தான் இருக்கும். ஆமாம், யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் கூச்சல் போடட்டும் என்று பிடிவாதமாகப் பேசுகிறார்.ஆகவே பெரியார், காமராஜரின் இந்தக் குருட்டுப் போக்கை வன்மையாக எதிர்த்துப் போராடக் கிளம்புவார்—