பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

இப்படித்தானே பொதுமக்கள்—பெரியார், தமிழ்நாடு என்ற பெயர் தேவை என்பதற்கான விளக்கமளித்தபோது பேசிக் கொண்டனர். பிறகோ, காமராஜர், தமிழ்நாடு என்ற பெயர் சூட்டக்கூட ஒப்பாதது கண்டு, பரணி பாடினாரோ என்றால், இல்லை.

ஆனாலும் காமராஜரை ஆதரிக்கிறார்! ஏன்? ஏன்? என்று பொதுமக்கள் கேட்கின்றனர்.

இவ்வண்ணம், தம்பி, ஒவ்வோர் பிரச்சினையிலும், இந்த ஆனால், ஆகவே எனும் சொற்கள், வண்ணத்தை, வடிவத்தை, வலிவை, விளைவை, நிலையை, நோக்கை, மாற்றிவிடக் காண்பாய். ஒவ்வொன்றாகவும், ஒவ்வோர் முனையில் நின்றும் எண்ணிப்பார்த்தால், முழுவதையும் காண்பாய் — இல்லையேல், குருடர் கண்ட யானைக் கதையாக முடியும்.

என்னோடு இருந்தார்கள். என்னால் ஆளானார்கள், என் திருமணத்தின்போது விட்டுப் பிரிந்தார்கள், தனிக்கட்சியானார்கள்.

என்ற பேச்சுடன், பெரியார் ஆனால்

திராவிடநாடு பிரச்சினை, பொருளாதாரத் திட்டம், சமுதாயப் பிரச்சினை

ஆகியவற்றிலே, முன்பு கொண்டிருந்த கருத்தினையே கொண்டு இருக்கிறார்கள்.

தனியாக இருக்கிறார்கள், வேறு கட்சிகளிலே குடிபுகுந்துவிடவில்லை.

என்று மட்டும் சேர்த்துப் பேசுவது என்ற போக்கு இருந்தால், இன்று அவர்,

என்னை விட்டுப் பிரிந்து போனதுகள், ஆனாலும் என் கொள்கைகளையே கொண்டோராக இருப்பதால், தேர்தலில் ஆதரிக்கிறேன் என்றல்லவா கூறுவார்!

ஆனால்—ஆகவே எனும் இரு சொற்களும், பயன்படுத்தப்படவேண்டிய முறை தவறிப் போவதால், தாலாட்ட வேண்டியவர்கள் தடிகொண்டு தாக்க வருவது போன்ற வேதனைதரும் விசித்திரம் விளைகிறது.

மற்றோர் வேடிக்கை, கேள், தம்பி!

வடநாட்டு நேருவுக்கு நாம் கருப்புக் கொடி காட்டினோமல்லவா? நையப் புடைத்தார்கள்! சிறையில் போட்டுச் சிதைத்தார்கள்!!