பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

பூட்ஸ் காலால் உதைத்தார்கள்,

உருட்டி உருட்டித் தள்ளினார்கள்.

என்று பேசியிருக்கிறார்

நான் கிளர்ச்சி செய்தேன் அடக்குமுறை ஏவவில்லை, ஆனால் நீ கருப்புக் கொடி காட்டினாய், உதை உதை என்று உதைத்தார்கள்! என்று பேசுகிறார்.

ஆனால் எனும் சொல் இதற்குப் பயன்பட்டது!

ஒருமுறைக்குப் பன்முறை இந்தப் போக்கினை அலசிப்பார், தம்பி, தமிழகத்தின் அரசியலே புரியும்!

நம்மோடு சேர்ந்திருப்பவர்களுக்குப் பெரியார் பயமூட்டப்பார்க்கிறார்.

ஓ! தோழர்களே! அங்கே இருந்தால் உங்களுக்கு அல்லல், அவதி, அடக்குமுறை தாக்கும். என்னோடு இருந்தால், துளியும் தொல்லை இல்லை. துரைத்தனம் உங்களைத் தொடாது.

என்ன கிளர்ச்சி செய்தாலும், என்னோடு இருப்பவருக்கு இம்சை நேரிடாது. சந்தேகமிருந்தால், கொடி கொளுத்தும் திட்டம், பிள்ளையார் உடைப்பு, ராமர் எரிப்பு எதை வேண்டுமானாலும் பார். போலீஸ் நம்மை ஏதாவது செய்ததா? அதுகள் கதை தெரியுமா? அதுகள் கருப்புக் கொடி பிடித்தன! உதைத்தார்கள்! உருட்டினார்கள்! சுட்டுத் தள்ளினார்கள்!

ஆகவே அதுகளோடு சேராதே! என்னோடு வா! தொல்லை வராது! துரைத்தனம் தொடாது!

என்று அழைக்கிறார்.

பூட்ஸ் காலால் உதைபட்டோம் — உண்மை. உருட்டி உருட்டித் தள்ளப்பட்டோம், உதை உதை என்று உதைத்தனர்; மறுக்கவில்லை! துப்பாக்கியால் சுட்டனர் — பிணமாயினர் தோழர்கள்! ஆமாடா தம்பி ஆமாம். மிகமிக நாகரீகமான முறையில், நல்லாட்சியுள்ள எந்த நாட்டிலும் அனுமதிக்கப்படும் கருப்புக்கொடி காட்டும் முறையில் கிளர்ச்சி செய்தோம் — பெரியார் கூறுகிறபடி

பூட்ஸ் காலால் உதைத்தனர்.

உருட்டி உருட்டித் தள்ளினர்.