பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

அதன் மூலமாக நமது அணிவகுப்பிலேயிருந்து யாரையாவது இழுத்துக்கொள்ளலாமா என்று முயற்சிக்கிறார் என்று வைததுக்கொள்வோம்; ஆசைக்கு ஆட்படும் போக்கு நம்மிடம் இருந்தால், இதைவிட, காங்கிரஸ் சுவைமிக்க ஆசை காட்டுகிறதே.

பதவி கிடைக்கும் என்று!—அணி வகுப்பிலே, யார், இளித்தவாயராயினர்!

கொள்கைக்காக கொடிய அடக்கு முறைக்கு ஆளாகினார்கள் என்பது புகழின் சின்னமாயிற்றே! இதைக் காட்டியும் கேலி பேச முடிகிறதே!!

அடக்குமுறை கண்டு அஞ்சாமலிருக்கும் மனப்போக்கு, பூண்போட்ட தடியால் அடித்தாலும், பூட்ஸ் காலால் உதைத்தாலும், தாங்கிக்கொள்ளும் வீர உள்ளத்தை, பெரியாரே! எமக்குத்தாரும்!! தாரும்!!—என்று கேட்டுக் கேட்டுப் பெற்றோம்.

இன்று அடிபட்டார்கள், உதைபட்டார்கள், ஆகையால் அங்கே போகாதீர்கள்—நான் நடத்தும் கிளர்ச்சியிலே புகை இருக்கும் நெருப்பு இராது; நெருப்பே தீண்டினாலும் சுடாது; சுட்டாலும் புண்ணாகாது; புண்ணானாலும் மருந்தில்லாமலே குணமாய்விடும் என்று பேசுவது கேட்டா, தம்பி, நீ நமது கழகத்தைவிட்டுச் சென்றுவிடுவாய்! அப்படி நீ கேட்பதோ, தவறு அண்ணா!! என்று கேட்டிடும் எண்ணற்ற தம்பிமார்களின் கோபப் பார்வையை அல்லவா நான் காண்கிறேன்!

அடிப்பார்கள்! உதைப்பார்கள்! ஆகவே, என்னோடு வாருங்கள்—எந்தக் கிளர்ச்சி செய்தாலும் சர்க்கார் கிட்டேகூட வரமாட்டார்கள் என்று ஆசை காட்டும் பெரியார் ஒரு அரைமணி நேரம் மட்டும்தான் பேசுகிறார். உடனே உண்மைப் பெரியார் முழக்கமிடுகிறார், அதே கூட்டத்தில், 5000 பேர் தூக்குமேடை ஏறச் சித்தமாக இருக்கவேண்டும், தெரிகிறதா!—என்று கூறுகிறார்!

இதிலிருந்து உனக்கு என்ன, தம்பி, புரிகிறது! எனக்குத் தலை சுற்றுகிறது!

அங்கே இருந்தால் அடிப்பார்கள், ஆகவே அங்கு இராதே; ஆனால் இங்கேவா, தூக்குமேடை ஏற!!

இதிலே உள்ள ஆகவே ஆனால்—இவைகளின் போக்கு, எப்படி இருக்கிறது, என்பதை ஆரஅமர இருந்து எண்ணிப்பார்!