53
அடிபட்டோரே! உதைப்பட்டோரே! அடக்குமுறைக் கொடுமைக்கு இலக்கானோரே! அவர்கள் எம்மை அடித்தபோது ஏற்பட்ட வேதனையைக் காட்டிலுமன்றோ, அது குறித்துக் கேலி பேசுவது கேட்டு வேதனை எழுகின்றது. அருந்தொண்டாற்றக் கிளம்பினோரையா அடித்திடக் கிளம்பினீர்! அறிவிலிகாள்! பிரிந்தோர் எனினும் அவரும் எம்மவர் என்பதை மறந்தா நிற்போம்! என்று கூறி, களம் வந்து துணைபுரிவர் நல்லோர். அந்த அளவுக்கு மனம் இடம்தராது போயினும், ஐயகோ! அடிக்கின்றனரே, அறியாச் சிறாரை! என்று கூறிக் கண்ணீர் சிந்தவேனும் இசைவர் இதயம் படைத்தோர். அடித்தனர், உதைத்தனர், உருட்டினர்! என்று கேலியல்லவா செய்கின்றனர்—என்று தோன்றும் தம்பி! இதையும் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும்.
போர்க்குறிக் காயமே
புகழின் காயம்!
யார்க்கது வாய்க்கும்!
ஆ! ஆ! நோக்குமின்!
அனந்தம் தலைமுறை
வருந்தனி மக்கள்
தினந்தினம் தாம் அனுபவிக்கும்
சுதந்திரம் தந்தது
தம்முனோர் நொந்த
புண்ணென் றெண்ணிச்
சிந்தை அன்புஉருகிச்
சிந்துவர் கண்ணீர்
என்றார் மனோன்மணீயம் ஆசிரியர்.
புகழின் காயம் பெற்றோம்! மேலும் மேலும் பெறுவதற்கான உள்ள உரம், இத்தகு கேலி மொழிகளால் ஏற்படும். ஆகவே, தம்பி, கவலைப்படுவானேன்!
ஆனால்......ஆகவே எனும் சொற்களின் சிலம்பம் தரும் சுவையான பாடம் கண்டு மகிழத்தான் இதைச் சொல்கிறேனேயல்லாமல், இதிலே குறிப்பிடப்பட்டுள்ள அரசியல் பிரச்சினைகளுக்காக அல்ல.