பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

தில், சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகள், அதே பாணியில் தன்னால் எழுதும். படித்துச் சுவைத்திடுவதுடன், நாம் நமக்காகமட்டுமல்ல, நம்மைத் தாக்குவோருக்கும் உதவுகிறோம் என்று பெருமையும் கொள்ளலாம்.

நினைக்க நினைக்க வேடிக்கை வேடிக்கையாக இருக்கிறது இந்த இரு சொற்கள் நடத்தும் விளையாட்டு.

குமாரசாமிராஜா, வடக்கு பொருளைப் பாழாக்குகிறது, ராஜ்யசர்க்கார் விஷயத்தில் அனாவசியமாகக் குறுக்கிடுகிறது, அதன் இந்தப் போக்கை நாம் எதிர்க்கவேண்டும்—என்றெல்லாம் பேசினாரல்லவா!

அந்தப் பேச்சுடன் அவர், ‘ஆகவே’ எனும் சொல்லை இணைத்திருந்தால், இன்று, தென்னாட்டு விடுதலைப் போர்த்தலைவராகிச் செயல்பட வேண்டிவரும். அவருக்கு அது விருப்பமில்லை. ஆகவே, ‘ஆகவே’வை விட்டுவிட்டார். இப்போது ‘ஆனால்’ பேச ஆரம்பித்து விட்டதாகத் தெரிகிறது.

வடக்கு அப்படிச் செய்கிறது, அது, இது என்று நான் சொன்னேன்—ஆனால் எனக்கு வடநாடு தென்னாடு பேதம் கிடையாது—அந்தக் காரியத்தை நான் ஆதரிக்கவும் மாட்டேன்—எதிர்க்கக் கூடச்செய்வேன்—நான் காங்கிரஸ்வாதியாக்கும்!—என்று நிருபரிடம் கூறுகிறாராம்.

பார்த்தாயா; தம்பி, ஒரே ஒருசொல், ஒருவருடைய போக்கையே மாற்றிவிடுகிறது.

“ஆகவே” என்று அவர் கூறினால் எப்படி இருந்திருக்கும்—ஆனால் என்று கூறும்போது எப்படி இருக்கிறது!

மைசூரில் முதலமைச்சராக இருந்த அனுமந்தைய்யாவும், காங்கிரஸ் கெட்டுவிட்டது.

சுயநலமிகள் புகுந்து விட்டார்கள்.

இந்தியா, அமெரிக்காவுக்கோ ரஷியாவுக்கோ அடிமை ஆகிவிடும்.

ஏதோ, நேருவின் புகழ், செல்வாக்கால் அந்த அவதி இன்னும் வரவில்லை.

என்பதாகப் பேசியிருக்கிறார்.

“ஆகவே”—என்று பேசினால் ஒரு தினுசான அனுமந்தய்யாவும், ‘ஆனால்’ என்று பேசினால் முற்றிலும் வேறுவிதமான அனுமந்தய்யாவும் தெரிவார்களல்லவா!