107
தொழுவத்தில், தன் கன்றின் முதுகை, நாவினால் நீவியபடி நிற்கிறது பசு! அதன் கழுத்திலே கட்டப்பட்டுள்ள மணியின் ஓசைதான் இசை! அந்தக் கன்றுக்குத்தான் எத்துணை பெருமை! நான் வேண்டுமென்றே ஒருமுறை என் காதை அசைத்தாலும் போதும்; கண்களால் கனிவுகாட்டி, என்ன? என்ன? என்று கேட்டாள் என் தாய்; கழுத்தை அசைத்து அசைத்து!— என்று கூறுவதுபோலக் குதித்தாடுகிறது கன்று.
தொட்டிலிலே அரசு செலுத்தும் மகவின் முகத்திலே வந்து வந்து போகும் களையும் விந்தை விந்தையான சேதிகள் எதனை எதனையோ கூறுவதுதான் போலும்!
அந்த அணங்கின் முகத்திலேயும் அகத்தின் பொலிவு ஒளிவிடுகிறது. புன்னகை இதழிலே! பல்வேறு வகையான புன்னகை! பெருமிதம் காட்டும் வகை! குறும்புணர்ச்சி காட்டும் வகை! கூச்சத்தைக் காட்டும் வகை! இங்ஙனம் பலப்பல! ஆனால், எல்லாவற்றிலும் ஓர் இனிய எழில்!!
எண்ணம் பலப்பலவும், கனவு வடிவம் கொண்டு, காரிகைக்கு துயிலில் விருந்தாகிவிடும் நிலைபோலும்!
அதோ! அதோ! அந்தப் புன்னகைக்கு என்ன பொருளோ? எழுப்பிக் கேட்டிடலாம்! எழுந்ததும், இன்பக் கனவினை ஏன் கலைத்தாய்? முழுதும் நான் கண்டு மகிழ இருந்தேனே! பாதியிலே எனை எழுப்பிப் பாழடித்து விட்டாயே! தின்னப் பழம் எடுத்துத் தோல் நீக்கி நிற்கையிலே, மந்தி பாய்ந்துவந்து பறித்தோடிச் சென்றிட்ட பழங்கதைபோல்!! என்றெல்லாம் கேட்டு மிக எரிச்சலும் காட்டுவளோ! ஏன் எழுப்பி அவள் மகிழ்வைப் போக்குவது; வேண்டாம்! என்று தோன்றும்.
இதழோரம் எழில் கூட்டும் அந்தப் புன்னகையில், ஏதோ ஒரு நினைவால் வந்துற்ற கூச்சமது நிச்சயமாய்த் தெரிகிறது. உண்மை, கூச்சம் எதன் பொருட்டு? குடத்தை இடுப்பேற்றி, குளிர்மதியைக் கண்ணேற்றி, மலருக்கு மணமூட்ட, கூந்தலிலே தானேற்றி, மையுண்ட கண்ணாள், பருவத்தாள், வானகத்தினும் வையகமே சிறந்ததென வாயால் மையலூட்டும் மொழியாமல், கண் வழியாய்க் காட்டிடும் காளையர் நெஞ்சினிலே கனலேற்றி நடக்கின்றாள்; புனல்கொண்டு வருவாளாம்! புன்னை பூத்திருக்கும் பொன்னில் மணமிருக்கும் என்றே புலவோர் கூறிடவே, மலர்க்குவியல் ஆங்கிருக்கும்! அன்னம் தவழ்ந்தாடும்! அணிகள் குதித்தோடும்! வண்ணம் பல