பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115

தம்பி! இந்த நிலையிருப்பின், எண்ணமும் இல்லை; எண்ணத்துடன் இணைந்து பிறக்கும் இன்பக் கனவும் இல்லை; அதன் தொடர்பாகவும், விளைவாகவும் ஏற்படும் எதிர்காலத் திட்டங்களும் இல்லை.

நடைபெறக்கூடியது; நடைபெற இயலும் என்பதை உறுதிப்படுத்தும் விதமான, அடிப்படை நிலை; இந்த அடிப்படை நிலையை வைத்து, என்னென்ன விதமான, ஏற்றமிகு செயல்களை, செம்மைகளை, சீர்களைப் பெறமுடியும் என்பதற்கான எண்ணம்—இவை இருப்பின், எண்ணம் ஈடேற வழி கிடைக்கும்; எத்தனை பேர், ஏளனம் பேசிடினும்.

பருத்திச் செடி கண்டு, துணிபற்றி எண்ணிடலாம்; துணி கிடைக்கும் வழி உண்டு, பருத்திமூலப் பொருளாக இருப்பதனால்.

வில்வக்காய் கண்டு, நூலாக்கித் தரி அமைத்து நெய்து ஆடைதனைப் பெற்றிடலாம் என்று எண்ணிடுவது, பேதைமை.

உண்மை நிலையுடன் உயர்வளிக்கும் கற்பனை கலந்துவிட்டால், இன்பக் கனவுகளை, விழித்த நிலையிலும் காண்பர். வித்தகர்கள்.

பட்டப்பகலிலே
பாவலர்க்குத் தோன்றுவதாம்
நெட்டைக் கனவின்
நிகழ்ச்சி

என்றார் பாரதியார்.

தம்பி! புன்னைமரம் நிற்கும் புனலிடம் சென்ற பூவை, கடிமணம் செய்யும் நோக்குக்கொண்ட காளையைக் கண்டாள் என்று தாய் மனம் கொண்ட எண்ணம், கனவினில் உருவம் பெற்றதுபற்றிக் கூறினேன். அவள் அதனையே, கழனியினின்றும் திரும்பிய தன் கணவனிடம் கூறுவளேல், என்ன சொல்வான்?

காவல் காத்திருந்த அலுப்பின் மிகுதியால், அவன் வாடிக் கிடப்பானேல், சரி! “சரி! இதுமட்டுமா, கனவு காண்பாய்! எட்டடுக்கு மாடியிலே, உன் செல்வி இருப்பது போலவும், பத்துப் பதினெட்டுத் தோழியர்கள் அவளைப் புடைசூழ நிற்பது