பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

கனவு காண்கிறான்!

என்று ஆதிக்கக் குரலிற் பேசக் கேட்டிருக்கிறோம்.

ஆனால், தம்பி! கனவுகள் நனவாகியுள்ளன!

விடுதலை வரலாறுகள், விஞ்ஞான வெற்றிகள், கனவுகள் நனவானதன் விளைவுகள்— அறியோமா!!

ஆற்றோரம்! அந்தி சாயும் நேரம்! ஊர்ந்து செல்லும் நிலையிலுள்ளான், உடலெங்கும் புண்பட்டான்!!போர் வீரன்— வாளிழந்தான், உடல் வலிவிழந்தான், உயிர் இழக்குமுன், வெற்றி பெற்றாகவேண்டும் என்ற எண்ணத்தான். இக்கரையில் படுத்தபடி, எதிர்ப்புறம் நெடுந்தொலைவில், தெரியும் எதிரிகளின் நடமாட்டத்தைக் காண்கிறான்; கோபம் கொப்பளிக்கிறது! கண்களிலே ஓர் ஒளி—வெறிகொண்டவனோ என்று எண்ணுவர், அதனைக் காண்போர்! கண் எதிரே, மாற்றார்! கட்கமேந்த இயலவில்லை!! நெஞ்சம் நெருப்புடை உலையாகிறது! ஏதேதோ எண்ணுகின்றான்!! தம்பி! முகத்திலே ஓர் மகிழ்ச்சிக் குறி தெரிகிறது! ஏன்? எதையோ காண்கிறான்—எதிர்காலத்தில் ஒரு சிறு பகுதியை!! கனவு காண்கிறான். தம்பி! கனவு. கேட்போமா! அவனை, வீரனே! நீ காணும் கனவு என்ன என்று? பாவம், களைப்பு மேலிடுகிறது. அவனுக்கு; பிறகு கேட்போம்!


10-9-61

அண்ணன்,
அண்ணாதுரை