பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

எண்ணியபடி, எதிர்வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தபடி, கலியாண வீட்டையே பார்த்தபடி இருப்பது உண்டல்லவா? அடிகள், அப்படி உட்கார்ந்து கொண்டிருக்கிறார், எதிர்த் திண்ணையில். எனக்கு உள்ள கஷ்டம் தெரியும்; எனவே வற்புறுத்த மனம் இடம் தரவில்லை; ஆனால் தம்பிக்குக் கடிதம் இல்லை என்றால், தவிப்பு ஏற்படுகிறது. அதனையும் கவனித்தாக வேண்டும், அந்த நிலையில் அடிகள்!

ஆனால். இந்த நிலை இன்னல் நிரம்பியதாகுமா? கன்னலைத் தின்னும்போதுகூடத்தான், இரத்தம் கசியும்படியான குத்தல் ஏற்பட்டுவிடுகிறது.

ஆற்றோரம் இருக்கிறானே, ஆற்றல் மறவன், அவன் நிலை, இன்னல் நிரம்பியது.

தாயகம் தாக்கப்படுகிறது; துடித்து எழுகிறான்! போரிடுகிறான்; எதிரியிடம் படைபலம் மிகுதி; பலர் மடிந்தனர்; சிலர் சிதறியோடினர்; சிலர் இவன்போல், பதுங்கிக் கொண்டுள்ளனர், நல்ல வாய்ப்பை எதிர்பார்த்தபடி.

என்னென்ன எண்ணம் தோன்றும் அந்நிலையில், வீரனுக்கு?

“நமக்கேன் இந்த வீண்வேலை! எவன் இந்த நாட்டை ஆண்டால் நமக்கு என்ன? அவனவன் பிழைப்பு அவனவனுடைய உழைப்பைப் பொறுத்து இருக்கிறது! கொடிமரத்திலே, எந்தக் கொடி பறந்தால்தான் நமக்கென்ன? கொலு மண்டபத்திலே எவன் கோலாகலமாகக் கொலுவிருந்தால்தான் நமக்கென்ன? நாமுண்டு, நமது உழைப்பு உண்டு! நாம் பணிந்து விடுவதுதான் நல்லது. காட்டு மிருகம்போல், பதுங்கிப் பதுங்கி, பயந்து பயந்து, இருப்பதைவிட, தோல்வியை ஒப்புக் கொண்டு, வென்றவன் நாடாளட்டும் என்று இருந்துவிட வேண்டியதுதான்!” என்றா எண்ணுவான். அவ்விதம் எண்ணுபவன், வீரனா? வீரமரபினன் ஆவானா? ஒருக்காலும் இல்லை.

உறங்கவில்லை! விழித்தபடி கனவு காண்கின்றான். ஒரு கனவு அல்ல; பல; மாறி மாறி!!

ஒரு அடவி ! அடர்ந்த காடு. எதிரிப்படைப் பிரிவின் தலைவன் முகம் ஒருபுறம்! அதற்குச் சற்றுத் தொலைவிலேயே படைவீரர் தங்க, இருக்க, அமைக்கப்பட்டுள்ன பாசறைகள்—சிறுசிறு அளவில்;