133
தலைவன் முகாமுக்குள் இருந்து சிரிப்பொலி! இசையொலி! கையொலி! வளையொலி!
இவன், முகம் சிவக்கிறது! வெற்றி பெற்றுவிட்டோம் என்ற மமதையில் மதுவும் மங்கையும் தேடி, மகிழ்ச்சி வெறி கொள்கிறான், இந்த, மடையன்!! ஆடிப்பாடிப் பிழைக்கும் எவளையோ இழுத்துவந்து, பொழுது போக்குகிறான்! நம் நாட்டில்!! நமது நாட்டுப் பெண்ணொருத்தி! நமது நாட்டை வீழ்த்தியவனுக்கு...செ! எப்படித் தாங்கிக்கொள்வது?
“ஆடு என்பான்; அவள் ஆடுவாள்! மறுக்கவா முடியும்! கத்தி கடாரி கரம் கொண்டிருந்த என் போன்றார்களே, காடுமேடு பதுங்கி இருக்கும் நிலை! அவள் என்ன செய்வாள், பாவம்!! ஆடுவாள்!! இவன் பாடுவான்!
ஆடாதே! நிறுத்து! நமது நாட்டை நாசமாக்கியவன் முன்பு, ஏ! பெண்ணே! ஆடிடுவது தகுமா!! நாட்டுப் பற்றற்றவளே! நமது கோட்டையை அழித்தான். கொலு மண்டபத்தைக் குலைத்தான்! மன்னனைச் சிறையிட்டான்! வீரர்களைக் கொன்று குவித்தான்! அடி, விவரம் கெட்டவளே! அவன் அமர்ந்திருக்கிறானே, வேலைப்பாடு மிகுந்த பட்டு விரிப்பு, அது நம்முடைய அரசியாரின் பொற்கரங்களால் ஆக்கப்பட்டது!! அதன்மீது, அவன்! மாற்றான்! மதிகெட்ட மாதே! மதுக்குடம், அதன்மீது அரசியாரின் அருமைக் குமாரர் இருவரும், ஒருவரோடு ஒருவர் மற்போர் நடத்தி, இந்தப் பட்டு விரிப்பு மீதுதான், உருளுவார்கள்—அரசியார், கைக்கொட்டிச் சிரிப்பார்கள்! அந்தப் பட்டு விரிப்புமீது எங்கிருந்தோ வந்தவன், இறுமாப்புடன் இருக்கிறான். இளித்தபடி, அவன் எதிரே நின்று, ஆடுகிறாய்! ஆடாதே! நாட்டின் மானம் போக்காதே! ஆடற்கலை பயின்றாய், இந்த அக்ரமனுக்காக அல்ல!! ஆடாதே! ஓடு! களம் நோக்கிக் கடுகி ஓடு! நமக்காக, நமது நாடு காக்க, மரபு காத்திட, மானம் காத்திட, போரிட்டு மடிந்தனர் உடன்பிறந்த உத்தமர்கள்! பிடிசாம்பலாகிப் போயினர்!! அந்தச் சாம்பற் குவியலின்மீது நின்று ஆடு; நாடு அழிந்ததுபற்றி அழுதுகொண்டே ஆடு! எதிரியின் தலைகளைக் கொய்து, கீழே போட்டுக் காலால் துவைப்பதுபோல ஆடு! கால்கள் ஓயும்வரை ஆடு! கனைத்துக் கீழே விழும் வரையில் ஆடு! ஆடிக்கொண்டே கிட! ஆவி போகும் வரையில், ஆடியபடி கிட! அங்கு! இடுகாட்டில்! கழுகுகளும் நரிகளும் வட்டமிடும் இடத்தில்! உடலைக்