137
எண்ணினேன்—என் மனக்கண்முன், கரியும் பரியும், தேரும் திருவும், கட்கமேந்தியோரும் கட்டியம் கூறுவோரும், முரசு கொட்டுவோரும் கவிதை புனைவோரும், கொடிகளும் தோரணங்களும், வடுக்களைக் கொண்ட வீரர்களும் அவர்கள் கொண்டுவந்த பொருட்களும், தெரியவில்லை என்றா எண்ணுகிறாய். மிக நன்றாகத் தெரிந்தன! வெற்றிபெற்ற படைகளை, மக்கள் வரவேற்கும் ஆரவாரம், வாழ்த்தொலி கூடத்தான், செவியிலே வீழ்ந்தது! செல்வதோ, சேறு நிரம்பிய பாதையில், பழையதோர் மோட்டாரில்! நினைப்போ, வெற்றி ஈட்டிய வேற்படையினர் விழாக்கோலம்பூண்டு, அவ்வழி நடந்த வரலாறுமீது!!
அந்தக் கனவும், காண்பவரின் களிப்பு சிறப்பு, வாய்ப்பு வல்லமை என்பது பற்றியதாக இல்லாமல், பொதுநலனுக்கு உகந்ததாக, நாட்டு நிலையினை உயர்த்துவதாக, மக்களுக்கு மாண்பளிப்பதாக இருப்பின் மட்டுமே, அது பாராட்டப்பட வேண்டியதாகிறது. அப்படிப்பட்ட ‘கனவுகள்’ உலகு திருத்தப்படத்தக்க உணர்வுகளை, வேகத்தை, திறமையைத் தந்தன.
கனவுதானே! கண்ணாடிக் கடைக்காரன் கனவு தெரியுமல்லவா, என்று கூறிக் கெக்கலிசெய்திடத் தோன்றும், நுனிப்புல் மேய்ந்திடும் போக்கினருக்கு. ஆமாம் தம்பி! அப்படி ஒரு கதை உண்டு, அறிந்திருப்பாய். அல்நாஷர் எனும் பெயரினன்; அங்காடியில் கண்ணாடிக்கடை நடத்திவந்தான்; பகற்போதினிலே, உறங்கினான்; கனவு கண்டான். கண்ணாடிக் கடையில் இலாபம் குவிகிறது—குன்றுபோல்! பெரிய இடம்! பெரியகடை! மலைபோல இலாபம் மாடமாளிகை! எடுபிடி! பட்டுப் பட்டாடை! வாகனாதிகள்! ஊரே, ஏவலுக்குக் காத்து நிற்கிறது! அரசன் அறிகிறான்! அவன் மகளையே தருகிறான்! அரண்மனையில் வாசம்! அந்தப்புறம்! அம்ச தூளிகா மஞ்சம்! கால்வருடுகிறாள் மன்னன் மகள்! காலை உதறுகிறான், அல்நாஷர் கண்ணாடிச் சாமான்கள், உடைபடுகின்றன! கனவு கலைகிறது! பெருநட்டம் ஏற்பட்டது கண்டு, கனவுகண்ட அல்நாஷர் கதறுகிறான். இது கதை! இதைக்காட்டிப் பகற்கனவு வீண் நட்டம் கொடுக்கும் என்ற பாடம் புகட்ட முனைகிறார்கள்.
ix.—9