138
தம்பி! இந்தக் கனவுக்கும், பாரதியார் குறிப்பிட்டாரென்று சொன்னேனே அந்தக் கனவினுக்கும், அடிப்படையில் உள்ள மாறுபாடு, கவனித்தனையா? அல்நாஷர் கண்ட கனவு அவன் உயர்வுபற்றி!! நான் விளக்கிக் கொண்டுவருகிற வகைக் கனவுகள், காண்போருக்குக் களிப்பும் உயர்வும், இலாபமும் சுவையும் தருவன அல்ல; மக்களுக்கு, நாட்டுக்கு, நிலைமை திருந்துதற்கு! மாண்பு, இதிலே தான் இருக்கிறது. இத்தகைய கனவு காண்போர், புத்தம் புதிய உணர்வுகளை மற்றவர் பெறச் செய்கின்றனர்.
பல்வேறு நாடுகளிலே, பல்வேறு காலங்களிலே, இத்தகு கனவுகள் கண்டனர் பலர்; சிலர் கவிதைகளாக்கினர்; சிலர் கருத்துமிக்க ஏடுகள் தீட்டினர், எதிர்காலம்பற்றி! அப்போதெல்லாம், அவைகளின் உட்திறம் அறிய இயலாதார், எள்ளிநகையாடினர். “கனவு காண்கிறான்! பகற்கனவு!” என்று கேலி செய்தனர்.
பாலைவனம் சோலைவனமாக வேண்டும்! அங்கு பசுங்கிளிகள் கொஞ்சி விளையாடவேண்டும்! கோலமிகு மயில்கள் ஆடிடவேண்டும்! கோதையுடன் கூடி இசை பயின்றிடவும் வேண்டும்!!— என்று கனவு கண்டோர்கள் பலர்.
வேதனை தரும் நிலையில், நாடு இருக்கும்போது விம்மிடுவர் சிலர்; சிலர் கொதித்தெழுவர்; சிலர் இந்நிலை மாறி நல்லதோர் நிலை எழாதா என்று ஏக்கமுற்று, எண்ணிப் பார்ப்பர்; அந்த எண்ணத்திலே ஓர், ‘எழிலுடை எதிர்காலம்’ தெரியும்; அகமும் முகமும் மலரும்; அருங்கவிதையோ, உணர்ச்சியூட்டும் உரை நடையோ உருவெடுக்கும்; உலகுக்கு ஒரு புதிய உணர்வு கிடைக்கும்.
மக்கள் குறித்தும், நாட்டு ஆட்சிமுறை குறித்தும், இத்தகைய கனவு கண்டவர்கள், எழுதியுள்ள ஏடுகள் பல மேனாடுகளிலே காணக்கிடக்கின்றன!
சர் தாமஸ் மூர் என்பவர் யுடோபியா—Utopia என்றோர் நூல் எழுதினார். ஒரு நாடு எங்ஙனம் அரசாளப்படவேண்டும், மக்கள் எவ்விதம் இருக்கவேண்டும். தொழில் முறைகள் எவ்வண்ணம் இருக்கவேண்டும், என்பன பற்றி எல்லாம் அவர் மனதிலே உருவாகிய கருத்துக்களை உள்ளடக்கிய ஏடு, அது.