139
யுடோபியா எனப் பெயரிட்டார். அவர் காணவிரும்பிய முறைகள் திகழ்ந்ததாக ஒரு தீவினைக் கற்பனை செய்து.
யுடோபியா என்று மூர், தமது கற்பனைத் தீவுக்குப் பெயரிட்டார்—பெயரிலேயே பொருளும் இழைந்திருந்தது.
யுடோபியா-Utopia எனும், அந்த ஆங்கிலச்சொல்லுக்கு மூலம், இரண்டு லத்தீன் மொழிச் சொற்கள். Ou என்றோர் சொல்; அதற்குப் பொருள், இல்லாத என்பதாகும். tobos என்பது மற்றோர் சொல்; அதற்குப் பொருள், இடம் என்பதாகும். இந்த இரு லத்தீன் சொற்களையும், ஒரு ஆங்கிலக் கூட்டுச் சொல்லாக்கி, இல்லாத இடம் என்று பொருள் கொண்ட யுடோபியா, Utopia என்று, தமது கற்பனைத் தீவுக்குப் பெயரிட்டார், சர். தாமஸ் மூர்.
இம் முறையினைத் தொடர்ந்து வேறு பலரும், பல்வேறு கற்பனை நாடுகளை, கற்பனை அரசுகளை, ஏட்டிலிட்டுக் காட்டினர்.
இவைகள் யாவும், அவர்கள் பட்டப் பகலில் கண்ட கனவுகள்! அவை பலிக்குமா பலிக்காதா, என்பது, அவைகளுக்காகப் பாடுபட, எத்துணைபேர் முன்வருவர், அவர்தம் தாங்கும் திறமை எத்தகையது என்பதைப் பொறுத்து, இருக்கிறது.
ஒருவன் தன் சுகத்துக்காக, தன் இலாபத்துக்காக, தன் உயர்வுக்காகக் காணும் கனவுகள்—அல்நாஷர் கனவுகள் — மற்றவர்களை, முயற்சி எடுத்துக்கொள்ள வைக்காது. கனவு கண்டவர்களே, எண்ணி எண்ணி ஏங்கவேண்டும்; அல்லது முயற்சி செய்து பார்க்க வேண்டும்; அவர்கள் கண்ட கனவு பலித்திட, மற்றவர்கள் பாடுபட முன்வருவர் என்று எதிர்பார்ப்பது பேதமை. பொது நோக்கக்துக்காக, மக்கள் வாழ்வு செம்மை அடைவதற்காகத் தூயநோக்குடன் சிலர் பட்டப் பகலிலே காணும் கனவுகள், பலித்திட, கனவு கண்டவர்கள் மட்டுமல்ல, கூறக் கேட்டவர்கள் முயற்சிக்கலாம்; முயற்சிக்க வேண்டும்; முயற்சித்துள்ளனர்!
ஒருவன், தன் நலனுக்காகக் காணும் கனவுபற்றி அல்நாஷர் கண்டானாமே அஃதுபோல—வெளியே எடுத்துரைக்கக்கூடக் கூச்சப்படுவான்! கூச்சத்தை அடக்கிக் கொண்டு கூறினாலும், கேட்போர் கைகொட்டிச் சிரிப்பர்
கேலியாக!!