பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

பொது நோக்குக்காக, மக்கள் நலனுக்காக, நாட்டு உயர்வுக்காக, கனவு காண்போர், எழுச்சியுடன் அதனை எடுத்துரைப்பர்; மற்றவர்களும் அதனை மகிழ்ச்சியுடன் கேட்பர்.

கேட்போருக்கு முதலிலே வியப்பும், பிறகு சுவையும் கிடைக்கும்; மெள்ள மெள்ள, அதனைப் பெறவேண்டும் என்ற எண்ணம் எழும் — முயற்சியில் ஈடுபட ஆவல் தோன்றும்—ஈடுபட்ட பிறகு, உறுதி வளரும்.

எனவேதான், தூய பொதுநோக்குடன் பட்டப்பகலில் கனவு காண்பவர்கள், பிறரைச் சிந்திக்கவும் செயலாற்றவும் செய்துவிடுகிறார்கள்.

தம்பி! ஆற்றோரத்தில் களைத்துப் படுத்திருந்த வீரன் கண்ட ‘கனவு’ அவனைத் தூக்குமரம் அழைத்துச் சென்றது, அல்லவா? அதனால், என்ன பலன்? அவனுக்காகட்டும், அவன் தன் கனவினை உரைக்கக் கேட்டிடும் மற்றவர்களுக்காகட்டும்? —என்று கேட்பாயேல், கூறுகிறேன். அயலான் நாட்டைப் பிடித்துக்கொண்டான் என்றால், அடங்கிக்கிடப்பது, அடிமையாகிவிடுவது என்பதல்ல, ஒவ்வொருவரும், ஆடிப் பிழைப்பவளானாலும், வாட்போர் வீரனானாலும், ஒவ்வொருவரும், தத்தமக்குக் கிடைக்கும் வாய்ப்புக்குத் தக்கபடி, வல்லமைக்கு ஏற்றவண்ணம், ஆதிக்கக்காரனை எதிர்த்து ஒழித்திட முனைய வேண்டும்— அந்த முயற்சியிலே, உயிர் போவதாயினும்! இந்த அரிய பாடம் இருக்கிறதல்லவா, வீரன் கண்ட கனவில்! அதனை அறிவோர், எத்துணை வீர உணர்ச்சிபெற இயலும் என்பதை எண்ணிப்பார், தம்பி! அப்போதுதான், அத்தகைய கனவுகள் காண்பதால், கிடைத்திடத்தக்க பலன்கள், விளங்கும்.

அடிமையாக்கப்பட்ட ஒவ்வொரு நாட்டிலேயும், விடுதலை பற்றிய கனவுகளைக் கண்டவர்கள், வீரத்தை, தியாக உணர்வை, அவை மூலம், நாட்டு மக்கள் பெற வைத்தனர் — அதனால், அவர்கள் கண்ட கனவுகள் நனவுகளாயின! நிறைவேறின! பலித்தன!

எண்ணிடச் சுவை தருகிறது என்பதற்காக மட்டுமே, நினைப்புகளை ஏற்படுத்திக் கொள்வதும், கேட்போருக்கு இனிப்பு அளிக்கிறது என்பதற்காகவே, சுவைபடக் கூறிடுவதும் பலன் தருவதாக அமையாது. சுவை இருக்கவேண்டும், அதே போது, பெற இயலும் என்ற எண்ணத்தைத் தரவல்லதாகவும், பெற்றாகவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுவதாகவும்,