பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

141

பெறுவதற்காக எந்த இழப்பையும் பொருட்படுத்தக்கூடாது என்ற உறுதியையும் தரவல்லதாக, அந்தக் கனவு இருத்தல் வேண்டும்.

வானவில்லைக் கண்டவன், வியந்து மகிழ்ந்திடுவது, முழுப் பயன் பெறும் செயலாகாது. வானவில்லிலே கண்ட வண்ணங்களை, நினைவிலே கொண்டு, அத்தகைய வண்ணங்களை மற்றப் பொருட்களிலே ஏற்றிடத்தக்க கலவை முறையினை அறிந்திட முயற்சித்து வெற்றிபெற்றால் மட்டுமே, வானவில்லைக் கண்டதால் ஏற்பட்ட வியப்பும், மகிழ்ச்சியும் முழுப் பயன் அளித்தது என்று கூறமுடியும்.

வீரவரலாற்றுச் சுவடிகளைச் சொல்லழகுக்காக மட்டுமே படிப்போர் வானவில்லைக் கண்டு வியப்போர் போன்றார்!

வரலாற்றுச் சுவடிகளிலே கிடைக்கும் வீர உணர்ச்சியை, அடிமைத் தளைகளை உடைத்தெறியும் செயலுக்காகப் பயன்படுத்துவோர், வானவில்லிலே காணப்படும் வண்ணங்களை, கலவை முறையால், ஆடைகளிலும், பிற பொருள்களிலும், ஏற்றி பயன் காண்போர் போன்றார்!

ஆகவே, தம்பி! உள்ள நிலைமைகளால் உளம் வெதும்பிச் செயலாற்றவும் சிந்திக்கவும் இயலா நிலை பெற்றுவிடாமல், தன்னலமற்று, பொதுநோக்குடன், நல்ல நிலைமை காண விரும்பி, தூய்மையாளர் கொள்ளும், சுவையும் பயனும் தரத்தக்க கற்பனைதான், பட்டப்பகலிலே காணப்படும் கனவு!

கொடுமைக்கு ஆளானோர், குமுறிக் கிடப்போர், அனைவருமே இத்தகைய கனவுகள் கண்டுவிட முடியும் என்று கூறமுடியாது.

கொடுமைகளைக் கண்டும் மனம் குலையாமல், நிலைமையைச் செம்மைப்படுத்தி ஆகவேண்டும் என்ற துடிப்புக்கொண்டோர் மட்டுமே, எதிர்காலம்பற்றிய, செம்மைபற்றிய, கனவு காண முடியும்; கண்டனர்; அந்தக் கனவுகள் யாவும் பலித்துமுள்ளன. அதனாலேயே, யார் என்ன செய்யமுடியும்? இவன் நடமாடும் அழிவு அல்லவோ? என்று மக்கள் கண்கசிந்து கரம் பிசைந்து குமுறத்தக்க நிலையினை உண்டாக்கிய கொடுங்கோலர்கள், இறுதியிலே அழிந்தொழிந்து போயினர். அடிமைப் படுகுழியில் வீழ்ந்துவிட்டது நாடு; இனி அது தலைநிமிர்ந்து, தன்மானம் பெற்று, தன்னரசு பெற்று வாழ முடியாது என்று