பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

143

இகழ்ந்து கொண்டு, அவர்தம் இலட்சியங்களைப் பழித்துக் கொண்டு; எழிலுடைய எதிர்காலம் குறித்து அவர்கள் கூறுவனவற்றை, வெட்டிப் பேச்சு என்று பேசிக்கொண்டு, கட்டி வைத்த குக்கல் கண்டவரைப் பார்த்துக் குலைத்திடும் வாடிக்கைபோல இருப்பர்.

தம்பி! ஆதிக்கக்காரனின் கூர்வாள், அடக்குமுறையின் கொடிய கூரிய பற்கள் என்பவைகள் மட்டுமல்ல, இத்தகையோரின் இழிமொழிகளையும், விடுதலை விரும்பிகள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டி வருகிறது! ஏற்றுக்கொண்டுள்ளனர். நஞ்சல்லவா கொடுத்தனர், சாக்ரடிசுக்கு! கல்லால் அடித்தல்லவா துரத்தினர், நபிகள் நாயகத்தை! முள்முடி அல்லவா சூட்டினர், ஏசுவுக்கு!

அவர்களுக்கே அக்கதி என்றால், தம்பி! மிகச் சாமான்யமானவர்கள், மிகப் பெரிய இலட்சியத்துக்காகப் பாடுபட முன்வந்தால், ஏசவா ஆட்கள் இருக்கமாட்டார்கள்!! தாங்கிக் கொண்டனர்! தாங்கிக் கொள்வோம்!! கனவுகள் பலிக்கும்; ஏனெனில் அந்தக் கனவுகள், நமக்கு ஒரு மாளிகை, நம்மைச் சுற்றிலும் ஆலமேற்ற விழியினர், நம் எதிரில் பேழைகள், அவைகளிலே அணிபணிகள், என்ற இம்முறையில் அல்ல!

நம்மை நோக்கி வாட்கள்! நமது பிடரியில் ஆதிக்கக்காரனின் கரம்! கரமா? பார், தம்பி! எனக்கு ஏற்படும் எண்ணத்தை, கரம் என்கிறேன்—கரத்தாலாவது நெட்டித் தள்ளட்டும் என்று; கரமல்ல, தம்பி! கரம் அல்ல! ஆதிக்கக்காரனின் கால்! நமது உடலில் புண் — கசையடியால் ஏற்பட்டவை! நமது இருப்பிடம், சிறை எனும் இருட்டறை! நமக்குப் படுக்கை, வைக்கோல் தூவப்பட்ட அல்லது அதுவுமற்ற கட்டாந்தரை! நமக்குக் கலயம், மண்ணாலானது! அதிலே உள்ளது புழுத்தது புளித்தது; அழுகல், நாற்றம் நிரப்பியது!! — இவைபோன்ற இன்னல்கள் நம்மை எதிர்நோக்கி இருப்பது தெரிந்தும், நாடு தன்மானம் தழைக்கும் இடமாக, தன்னாட்சிக் கூடமாகத் திகழவேண்டும் என்றல்லவா எண்ணுகிறோம். எத்துணை ஆத்திரம் பிறக்கும், ஆதிக்கக்காரர்களுக்கு. உறுமுகின்றனர்! அந்த உறுமலைக் கேட்டுக் குலைநடுக்கம் கொள்பவர்கள். நம்முடன் எங்ஙனம் இணைந்து இருக்க இயலும். நாடு மீட்டிடும் நற்பணியிலே ஈடுபட்டிருக்கும் நம்முடன் இருக்க, கூடிப் பணியாற்ற இயலாதார், தமது இயலாமையையா வெளியே எடுத்துரைப்பர்!! கூச்சமாக இருக்குமல்லவா? -