பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

147

கனிச்சுளையா? இடையா படர்கொடியா? உடலா பொன் உருவா? என்றெல்லாம் அவன் பேச, விழியால் பதிலளித்து மகிழலாம் என்ற எண்ணம் கொண்ட எழிலரசி, மன்னன் களம் நோக்கிச் செல்லும் காட்சி கண்டு, கையொலியும் எழுப்புகிறாள், கண்ணொளியும் பொழிகிறாள். காதலின்பம் இழக்கிறோம் என்பதையும் உணருகிறாள், பெற்ற இன்பத்தை எண்ணுகிறாள், வெட்கி முகம் சிவக்கிறாள். களத்திலே ‘அவருக்கு’ ஏதேனும் ஏற்பட்டுவிட்டால்? என்று எண்ணுகிறாள், அச்சத்தால் முகம் வெளுக்கிறது. மறு கணமோ, நாடு வாழ்ந்திடக் கூடி நடந்திடும் தானையினர் எழுப்பிடும் வீர முழக்கம் கேட்கிறாள், எழுச்சி கொள்கிறாள், நாடு மீட்டிடச் செல்கிறான் என் மணவாளன்! என்று பெருமை கொள்கிறாள்.

தம்பி! எனக்கென்னவோ இப்போதெல்லாம், நமது கூட்டங்களில், ஊர்வலங்களில், காணப்படும் எழுச்சியும் மகிழ்ச்சியும், உணர்ச்சியும், எழுப்பப்படும் முழக்கமும், களம் நோக்கிச் செல்லும் படையினை வாழ்த்தி வழியனுப்பி வைக்கும் காட்சியைத்தான் நினைவிற்குக் கொண்டுவருகிறது! நமது ‘உடன்பிறந்தார்’ என்பதனால் மட்டும் ஏற்படும் மகிழ்ச்சி அல்ல! நமது ‘உடன்பிறந்தார்’ உயிரைத் துரும்பென மதித்து, எதையும் இழக்கத் துணிந்து, இழக்கொணாத உரிமை காத்திடச் செல்கிறார் களம் நோக்கி; கரமோ காலோ, உடலிற் சில பாகமோ வெட்டுண்டு போகலாம்! உயிரே பட்டுப் போகலாம்! செல்கிறார் செருமுனை நோக்கி! திரும்புங் காலை வெற்றிக்கொடி பறக்கும்! ஆயின், வீரர் பலர் உயிரிழந்திடுவர்—என்றெல்லாம் எண்ணங்கள் பலப்பல எழும்பித்தான், இந்த உணர்ச்சியைக் கிளப்பிவிட்டுவிட்டிருக்கிறது. ஒளிப்பானேன், மறைப்பானேன், தம்பி! எனக்கே அப்படிப்பட்ட உணர்ச்சிதான் முழுக்க முழுக்க. ஒவ்வொரு நாள் காணும்போதும், ஆசை தீரப் பார்த்திடுவோம், நாளையதினம் துரைத்தனத்தார், பார்க்க விடுகிறார்களா இல்லையோ!—என்ற எண்ணம். ஒவ்வொரு முறை பேசும்போதும், சொல்லவேண்டியதனைத்தையும் சொல்லிவிட வேண்டும், ஏனெனில், மீண்டும் பேசிடும் வாய்ப்பு எந்த விநாடியும் பறிக்கப்பட்டுவிடலாம் — என்ற எண்ணம். தம்பி! நம்மில் அனைவருமே இந்த நிலையை மிக நன்றாக உணர்ந்துவிட்டிருப்பதனால்தான், கரை புரண்டோடும் எழுச்சிமட்டுமல்ல, இதுவரை காணாத புத்துணர்ச்சி, மன நெகிழ்ச்சி காணுகிறோம். களம் நோக்கி நடக்கிறோம், தம்பி! வாழ்த்தி வழியனுப்புகிறது நாடு! கண்துடைத்துக், கட்டிப்பிடித்து. கன்னம் தொட்டு,