148
சென்றுவா, மகனே! வென்று வா! என்று வீடும் வாழ்த்தி அனுப்புகிறது.
நம்மிலே சிலர் பிரிந்ததனால் நாட்டுநிலை அறியாதார் சிலர், நமது முயற்சி முறிந்துவிட்டது, இயக்கம் உடைந்துவிட்டது, உருக்குலைந்த நிலையில் இந்த விடுதலை இயக்கம் ஏதும் செய்ய இயலாததாகி, எடுப்பார் கைப்பிள்ளையாகிவிடும், அல்லது மாற்றார்முன் மண்டியிடும் என்றெல்லாம் எண்ணி மனப்பால் குடித்தனர். நிலைமையோ அஃதன்று. ‘களைபோயிற்று, பயிர் தழைத்தது!’ என்று கூறிடுவார் உளர்! அவர்களைக் கடுமையாகக் கண்டித்துத்தான் அடக்கிவருகிறேன்—சொல்வதைத் தான் நான் தடுத்திட முடிகிறதேயன்றி, எண்ணத்தை எங்ஙனம் இல்லாது போக்கிட இயலும். உள்ளபடி அவ்விதம் எண்ணுவோர் பலர் உளர். ஆனால் மிகப் பலரோ, சிலர் நம்மைவிட்டுப் பிரிந்தனர், எனவே அவர்கள் செய்துவந்த பணிகளுக்கு ஈடுசெய்திடும் வண்ணம் நாம் மிகுதியாகப் பணியாற்ற வேண்டும்; அதுமட்டுமல்ல. அவர்களின் இன்றையப் போக்கினால் ஏற்படும் இழப்புகளையும் ஈடுகட்டியாக வேண்டும் என்ற எண்ணத்துடன், மிகத்திறம்படப் பணியாற்றுகிறார்கள்.
மாற்றுக் கட்சியினர் இதை உணருகிறார்களோ இல்லையோ; எல்லாக் கட்சிகளுமே தேர்தல் நோக்குடன் சுறுசுறுப்பாகத் தான் பணியாற்றி வருகின்றன; நம்மைப் போலவே! ஆனால். மற்ற எவர் நடத்தும் இயக்கத்திலும், நமது இயக்க நிகழ்ச்சிகளில் காணப்படும் இந்தப் ‘பாச உணர்ச்சி’ இருப்பதாகத் தெரிவதில்லை—தெரியக்காணோம்—இருப்பதற்கான அறிகுறியும் இல்லை.
எடை போடுவது—எவரெவரிடம் என்னென்ன முறையில் பேசுவது—என்னென்ன வாக்களிப்பது—எவரைச் சிக்க வைக்க என்ன வலை, எவருக்கு என்ன விலை—என்ற இவைபற்றிய எண்ணம்தான் அங்கெல்லாம். கண்டதும் ஓர் முகமலர்ச்சி! பேச்சிலே ஓர் கனிவு! பார்வையிலேயே ஓர் பாசம்!— இவை இங்கன்றி வேறோர் இடத்தில் இல்லை.
தம்பி!உணவு விடுதியிலும் சாப்பிடுகிறார்கள்; வீட்டிலேயும் சாப்பிடுகிறோம். வீட்டில் செய்யும் கறி வகைகளைக் காட்டிலும், அதிகமாகவே உணவு விடுதியில் செய்கிறார்கள். வீட்டிலே, இலை போடுவார்கள்—மறதியால், பொத்தல் உள்ளதாகக்கூடப் போட்டுவிடுவார்கள். தெளித்துச் சுத்தம்