பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

உம்! உம்!— என்று கூறுகிறார் அதிகாரி!

மனுக்களைத் தருகின்றனர் ஏழை மக்கள். வாங்குகிறார் அமைச்சர்! அதை வாங்கிக்கொள்கிறார் மற்றோர் அதிகாரி!

கோயிலிலே பூவால் அர்ச்சனை செய்ததும், அந்த மலர்கள் தேவருலகு சென்று தேவ தேவன்மீது வீழ்வதாக அல்லவா எண்ணிக் கொள்கிறார்கள்; அது பக்தியினால். இங்கு பாடுபடுவோர், ‘மனு’வை மந்திரி தொட்ட உடன், குறைகள் தீர்ந்துவிட்டது என்று எண்ணிக் கொள்கிறார்கள்; எண்ணிக் கொள்ளும்படி, அதிகாரியும் சீமானும் போட்டியிட்டுக் கொண்டு சொல்லி வைக்கிறார்கள்.

அமைச்சர் பேசுகிறார்! செ! என்ன துடுக்குத்தனம், பார், தம்பி! எனக்கு—பேசுகிறார் என்று சொல்கிறேன். அமைச்சர் பேசுவாரா? சொற்பொழிவாற்றுகிறார். தாக்குகிறார்! தகர்க்கிறார்! முகமூடியைக் கிழிக்கிறார்! எச்சரிகை விடுக்கிறார்! எதிர்க்கட்சிகளை!!

கேட்டிடும் சீமான், எந்த இடத்திலே மட்டும் கைகொட்ட வேண்டும் என்பதை அறிந்து அதன்படி நடக்க, எத்தனை பாடுபடுகிறார் தெரியுமா தம்பி!

ஏழைக்கு வியப்பாக இருக்கிறது. நாம்தான், அகவிலையால் வரிச்சுமையால், வறுமையால் பிணியால், அவதிப்படுகிறோம்; கோபம்கூட வரத்தான் செய்கிறது; இவருக்குப் பாபம் எதற்காக இத்தனை ஆத்திரம்! இவரே சொல்கிறார், எதிர்ப்பாளர்கள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள், மிகச் சிலர் என்று; அது உண்மையானால். இவர் எதற்காக, யாரோ உச்சியைப் பிடித்துக் குலுக்கிடுவதுபோல ஆத்திரப்படுகிறார்—என்றெண்ணி வியப்படைகிறான். ஏழைகள் ஈடேற வழி சொல்லுவார் என்று எதிர்பார்க்கிறான்! சொற்பொழிவின் இறுதியில், எதிர்க் கட்சிகளை எல்லாம் கொன்று குவித்துத் தம் காலடியில் குவியலாகப் போட்டுக்கொண்டான் பிறகு, அமைச்சர். ஏழை எளியவர்கட்கும், ஈடேற வழி சொல்கிறார்.

வயிற்றை இறுக்கிக் கட்டுங்கள்

வரி கட்டத் தயங்காதீர்கள்.

கஷ்டம் கஷ்டம் என்று கதறி, காலம் கடத்திட வேண்டாம்.