154
கழகக்காரர் கொட்டம் அடக்க.........
கையாலாக வில்லையோ உம்மால்!
கூட்டம் சேருது அமர்க்களமாக.........
ஓட்டுச் சேர்க்கும் வழியைப் பாரும்.
விதைப்பண்ணைக்கு விட்ட நிலத்தின் விலையைக் கொஞ்சம் கூட்டித் தரச் சொல்லி.....
உத்தரவு விரைவிலே வரும். உம்முடைய பங்கு, தேர்தல் நிதிக்கு உடனே அனுப்பி வைத்திடும், ஆமாம்.
இப்படிப்பட்ட உரையாடல்கள்! நடந்தபடி! மோட்டாரில் உட்கார்ந்தபடி! மோட்டார் புறப்படுகிறது! ஜே போடப்படுகிறது! தூசி கிளம்புகிறது! சீமான்கள் உடையை உதறிக் கொள்கிறார்கள். ஏழைகள் அதுவும் செய்யவில்லை. கூட்டம் கலைகிறது! பத்திரிகையில் பக்கம் பிறகு நிரம்பி வருகிறது, நிகழ்ச்சி குறித்து.
தம்பி! இந்த முறையன்றி, வேறு எந்த முறையிலே நடக்கிறது அமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள்! இதிலே பற்றும் பாசமும் காணமுடியாது; பயமும் நயமும் காணப்படும்; ஒட்டும் உறவும் இருக்காது, உசாவல் உராய்தல் இருக்கும்; கண்களில் கனிவு இருக்காது; பார்வையில் பசி நிறைந்திருக்கும். பளபளப்பு மிகுந்திருக்கும்; பரிவு மிகவும் குறைந்திருக்கும். அதிகம் சொல்வானேன், தம்பி! இது உணவு விடுதிச் சாப்பாடு! வீட்டுச் சாப்பாடு அல்ல! உண்டவரும் தந்தவரும் கொடுத்ததையும் கொண்டவையும் கணக்கெடுக்கும் போக்கினரே—உள்ளம் உள்ளத்துடன் உறவாடும் நிலையினர் அல்லர். எனவேதான். அந்த நிகழ்ச்சிகளிலே, ஒரு கலகலப்பு இருப்பதில்லை; களிப்பு மலர்வதில்லை! காகிதப் பூவாக, கல்லுருவமாக இருக்கிறது! தம்பி! நம்முடைய கழக நிகழ்ச்சிகள் அவ்விதமல்லவே! கடல் கடந்து சென்று திரும்பி வந்த தலைமகனை, குடும்பம் வரவேற்றுக் குதூகலித்து உரையாடி, இல்லம்தனில் உள்ள எழிலை எல்லாம் எடுத்துரைத்து, இன்பம் ததும்பும்படி எதை எதையோதான் பேசி மகிழ்ந்து உறவாடும் முறையன்றோ காண்கின்றோம், நம் கழக நிகழ்ச்சிகளில். பொருளற்றதா இந்தப் போக்கு? பயனற்றதா இந்த நிலைமை? கருத்தற்றவரன்றி வேறெவரும் இதனை உணராதிருக்க முடியாது.