பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

155

களிறும் காட்டெருமையும், கடுவனும் கரடியும், கொல்லும் புலியும் பிறவும் உலவும். காடு சூழ் குன்று பல சென்று வந்தேன்—பத்து நாட்களுக்கு முன்பு.

வளைந்த பாதைகள்! வழுக்கல் பாறைகள்! அடர்ந்த புதர், ஆபத்தான அடவிகள்! இங்கெல்லாம் சென்றிருந்தேன். எழில்காண அல்ல, தம்பி! காடுசூழ் இடமாம் பருகூர் மலையினில் கொடியும் கண்டேன். கன்னடம் பேசும் படுகர் கழகம் நடத்தக் கண்டேன். குளிர்மிகு ‘குந்தா’தன்னில் கூடிய தோழர்மாட்டு, கொள்கையின் ஆர்வம் கண்டேன், கொள்ளை இன்பம் உண்டேன். கோத்தகிரிக்குச் சென்றேன்; கூடினர் பெரியோர், இளைஞர்; அனைவரும் பேசும் மொழி, அருமைக் கன்னடம்தான், தம்பி! அங்கெலாம் கழகம், ஆமாம்! அவரெலாம் அண்ணா என்றே அன்புடன் அழைக்கக் கேட்டு, அவன் எனக்கு எப்படி அண்ணனாவான்! ஒட்டென்ன உறவு என்ன? ஒரு தாய் வயிற்றிலா உதித்தோம்? என்று கற்றதுபேசிக் காழ்ப்பைக் கக்கிடும் போக்கினர்போல், காடுடை இடத்திலுள்ளார் இல்லை. அவரெல்லாம், அன்பினைச் சொரிகின்றார்கள், ஆதரவளிக்கின்றார்கள். நாளையோ மறுநாளோதான் நமது விடுதலைக்கான போரினைத் தொடுக்க வேண்டி நேரிடும் என்ற நெஞ்சினராக உள்ளனர்! கொஞ்சமா, அவர்கள் அன்பு!! கொடுத்தது என்ன அவர்கட்கு, நான்? பெற்றதோ பாசம், நேசம்! இதனை நான் பெற்ற பின்னர், எது இழப்பினுந்தான் என்ன? சுரங்கம் நிரம்பி உளது; பாளங்கள் பறி போனாலும்! களஞ்சியம் புகுந்து நெல்லைக் சென்றிட்டாலும்; வளமிகு வயலும் இங்கே வகையாக உளது களவாடிச் தம்பி! அல்லியைப் பறித்துச் சென்றார்; அழகு நீரோடை, அரும்புடன் இருக்குதப்பா!! அதனை நாம் இழந்தோமில்லை. கழகத்தின் கொள்கை இன்று காடு சூழ் இடங்கள்கூட நுழைந்துளது, தம்பி! உழைப்பு வெற்றி தந்துள்ளது!!

கொட்டுதே மாற்றார் நாக்கு! கொடுவாளாகி வெட்டுதே பிரிந்தோர் போக்கு! என்றெலாம் எண்ணமிட்டு, ஏக்கம் நான் கொண்டிட்டாலும், எங்கும் நான் காணும் காட்சி மாமருந்தாகி, என்னை, களிப்பூரில் கொண்டு சேர்த்து, காண் என்று கூறக்கேட்டேன்.

சுற்றுலா வந்தபோது, சிற்றூர்கள், பலவும் கண்டேன்—சிரித்த முல்லை கொல்லையில் காணும் மங்கை, விடுவளோ! பறித்திடாமல்; அதுபோல், போனது சரிதான் அண்ணா.