பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

159

கணக்கர் போனால் கடை போகும் என்று கருதிய நிலை இன்றில்லை.

காடுசூழ் சிற்றூர் எல்லாம், கழகம் கண்டனர் நம் தோழர்.

கழக நிலையை அறிந்ததால் கலக்கமடைந்த பண்டிதர், கலக்கப் பார்க்கிறார் நம் மனதை, உள்நாட்டுப் போர் வருமென்று கூறி.

ஆனால், தம்பி! உள்நாட்டுப் போர் என்பதெல்லாம் உதட்டுப் போர்தான்! வேறொன்றுமில்லை. எங்கும் பூத்திருக்கும் வண்ண மலர்களை, காம்பு உடையாமல். இதழ் கெடாமல், பக்குவமாகப் பறித்தெடுத்து மாலையாகத் தொடுத்திடுவதுபோல, எங்கணும் காணப்படும் எழுச்சியினைப் பக்குவமாகக் கூட்டுச் சக்தியாக்கி, வருகிற பொதுத்தேர்தலிலே, நம் கழகம் வெற்றிபெற முனைந்து நின்று பணியாற்று. முறிந்து போகும் பண்டிதர் முடுக்கு.

தேர்தல் குறித்துத் திட்டமிட்டு, திரட்டிடு பேராதரவு. தெருத்தெருவாகச் சென்றிடலாம், தெரிவித்திடலாம், காங்கிரசாட்சியிலே, விளைந்துவிட்ட கேடுபாடுகளை. ஒன்றா இரண்டா அவை, தம்பி! அடுக்கடுக்காக உள்ளனவே! ஒன்றை எடுத்துக்கொண்டாலே, நன்றாய் விளக்க நாள் ஆகும். உள்ள நாட்கள் மிகக் குறைவு, கொள்ளை வேலை இருக்குதப்பா! வேறு நினைப்புகள் வேண்டாம் இனி, வெற்றிகாண வழி தேடு! உதயசூரியன், நம் சின்னம். ஊரெங்கும் அறிவித்திட, முன் வருவாய். நீயே அறிவாய் என்றாலும், நானும் அறிவேன் என்றுணர்த்த, தம்பி! சில நான், தொகுத்தளிப்பேன். தரமுடன் அதனைப் பயன்படுத்து; துண்டு விளம்பரம் ஆக்கலாம். சுவரொட்டிகளும் ஆக்கலாம், சிந்துகளாக்கிப் பாடிடலாம். செய்முறை, உன்திறம். விட்டுவிட்டேன். கேட்டிடு, கூறிட, கருத்துரையை :

சோறு தின்பவர் சோம்பேறி எனச் சொல்லுகிறார் நேரு பண்டிதரும்; ‘ஓட்டு’ கேட்கும் காங்கிரசார் உண்பது என்ன? கேட்டிடுவீர்!

கோட்டை கொத்தளம் கட்டினவர், கோபுரம் பலப்பல எழுப்பினவர், மாடமாளிகை அமைத்தவர்கள் சோறு தின்பவர், நம் இனத்தார். சோம்பேறிகளோ, அவர்களெலாம்?