162
அரிசிச் சோறு கூடாதாம்! அறிவிக்கிறார் இப்போது. ஆளக் காங்கிரஸ் வந்திட்டால் அழியும் நெல்வயல்அறிவீரே
கோதுமை விளைவது வடநாட்டில். கோதுமை சாப்பிடத் தூண்டுகிறார். கோதுமை சாப்பிட நாம் முனைந்தால், கோடி கோடி பணம் வடக்குக்கு.
ஓட்டுச் சாவடி போகுமுன்பு ஒரு கணம் இதனை யோசிப்பீர்; உழவுத் தொழிலைக் காத்திடவே ‘உதயசூரியன்’ ஆதரிப்பீர்!
அமெரிக்கா தரும் பால் பவுடர் இலவசம், ஏழைக் குழந்தைகட்கு! அதுவும் கள்ளமார்க்கட்டு, வந்து விற்குது! காரணம் யார்?
பிச்சை எடுத்தார் பெருமாளு; அத்தைப் பறித்ததாம் அனுமாரு எனக் கொச்சை மொழியிலே கூறுவரே, இது அதுபோலத்தானே இருக்கு!
அமெரிக்கத் தூதர் கண்டிக்கிறார்; ஆளும் காங்கிரஸ் பதில் தருமா?
சிங்களம் ஆளும் சீமாட்டி சிரீமாவோ கொடுமையினால், சிறகொடிந்த பறவைகளாய் சித்திரவதைக்கு ஆளாகிச் சீரழிகிறார், நம் நாட்டார்.
அம்மாவுக்கு மாம்பழம் ஐயா கொடுக்கிறார் பரிவோடு. ஆலாய்ப் பறக்கும் தமிழர்களை, அடித்து நொறுக்குவது அம்மாதான்!! ஐயாவுக்குக் கவலை இல்லை, ஆமாம், அவர் வடநாடு!! வதைபடுவது இலங்கையிலே, வாழ்விழந்த திராவிடராம்.
திராவிடர் வாழப் பாடுபடும் தி. மு. கழகக் கரம் வலுத்தால், தீரும் துயரம் இலங்கையினில்!
இலங்கைத் தமிழர் துயர் துடைக்க, சிங்கத் திராவிடத் தோழர்களே! பொங்கி எழுவீர்; வந்திடுவீர், பொதுத்தேர்தல் வருகுது விரைவினிலே.
பொல்லாங்கெல்லாம் அழிந்திடவே, புதுமை? வாழ்வு செழித்திடவே, போட்டிடுவீர் உம் ஓட்டுகளை ‘உதயசூரியன்’ அழைக்கின்றான்.