பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

169

எப்படி, சமரசம் பேசலாம்?
பத்து வருஷத் தவணை கேட்கலாமா?
கழகத்துக்கு நீ உடந்தையா?
கதர் உடையில் கழகமா?

இப்படிப்பட்டவர் காங்கிரஸ் அமைச்சராக இருக்கலாமா?

அண்ணாத்துரையே பரவாயில்லை. பிரிந்து போகிறேன் என்கிறான். அமைச்சர் வேலை பார்க்கும் காங்கிரஸ்காரர், 10 வருடம் ஒட்டிக்கொண்டு இருந்துவிட்டு, அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டு, பிறகு நாட்டைப் பிரித்துக்கொள்ளத் திட்டமிடுகிறார்.

இது மிகமிக ஆபத்து!

காங்கிரஸ் அமைச்சரின் பேச்சு கண்டிக்கத்தக்கது.

என்றெல்லாம் அந்த ஆங்கில ஏடு எழுதிற்று.

உணருகிறார்களோ இல்லையோ, பேரரசு நடாத்தும் நிலையில் உள்ள வடநாட்டுத் தலைவர்கள், கழகத்தின்மீது கோபம் கொள்கிறார்கள்; ஆனால் தென்னகத்துக் காங்கிரஸ் தலைவர்கள் மீதோ, சந்தேகம் கொள்கிறார்கள்.

இவர்கள் பதவியில் ஒட்டிக்கொண்டு, பலனைச் சுவைத்துக் கொண்டு இருப்பதால், பல்லிளித்துக் கொண்டுள்ளனர்; உள்ளூர இவர்களுக்கும் கழகக்காரர் போலவேதான், வடநாடு தென்னாடு என்ற பேத உணர்ச்சி இருக்கிறது; இவர்கள்,

கூடிக் குடிகெடுக்கிறார்கள்

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகிறார்கள்.

இந்தியா ஒன்று என்கிறார்கள் “எமக்கு இவ்வளவு தானா?” என்று பங்குச் சண்டை போடுகிறார்கள்!

இவர்களை முழுவதும் நம்பிவிடுவதற்கு இல்லை! எந்த நேரத்திலும் இவர்கள் தமது கோலத்தை மாற்றிக் கொள்வார்கள்; கோபம் கக்குவார்கள்! இவர்கள்மீது எப்படியும் ஒரு கண் வைத்தபடிதான் இருக்கவேண்டும், என்று பேரரசினர் எண்ணுகின்றனர்.


ix.—11