பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

தாங்கிக்கொண்டால், தாக்குவோருக்குக் களைப்பு மேலிடும்.

களைப்பு மேலிட்ட நிலையிலும் தாக்குவர்; மேலும் களைத்துப் போவர்!

பிறகு? பிறகா! தாக்குதல் வலிவிழக்கும்! நமது வலிவு அவர்க்கு விளங்கும்! வெற்றி நமக்குக் கிடைக்கும்.

தம்பி! விடுதலை எனும் தூயதான குறிக்கோளுக்காகப் பணியாற்றும் இயக்கம் கொள்ளவேண்டிய இந்த எண்ணம் தான், நமக்கெல்லாம்! ஆகவேதான், நாம், தாங்கிக்கொள்ளும் சக்தியைப் பெறுகிறோம்; இவர்களின் தாக்கும் சக்தி குறைந்து வருகிறது. இம்முறை நடைபெறும் பொதுத்தேர்தல், அவர்கள் தமது தாக்கும் சக்திக்குத் துணைதேடி, அதிகப்படுத்திக் கொண்டுவந்து, தேர்தல் களத்தில் நம்மைத் தாக்க ஏற்பட்டுள்ள வாய்ப்பு.

இதைத் தாங்கிக்கொண்டால், தம்பி! இஃது உறுதி. பிறகு அவர்களின் தாக்கும் சக்தி வலிவிழந்துபோகும்!!

பிறகு வேறுகட்டம் எழக்கூடும்! கண்காணத் தீவுக்கு எடுத்தேகும் கட்டம்! கட்டிவைத்துச் சுட்டுத்தள்ளும் கட்டம்! கண்ணைப் பெயர்த்திடும் கட்டம்!

இப்போது, தங்களால் திரட்டமுடிந்த தளவாடங்களைக் குவித்துவைத்துக் கொண்டு, தாக்கித் தகர்த்திடுவேன் என்று அறைகூவலை விட்டபடி, காங்கிரஸ் கட்சி தி. மு. கழகத்தை, பொதுத் தேர்தல் எனும் களத்துக்கு அழைக்கும் கட்டம்.

இதிலே, நமது கழகம், தாங்கும் சக்தியை உலகறிய எடுத்துக்காட்டினால், காங்கிரஸ் தனது தாக்கும் சக்தி வலிவிழந்துவிட்டதை உணர்ந்துகொள்ளும்.

பிறகு வேறு முறைகளைத் தேடிடும்; களத்தின் அமைப்பு வேறுவேறு ஆகிடும்; அது பிறகு! இப்போது எழுப்பப்பட்டுள்ள பிரச்சினை தேர்தல் எனும் களம் நின்று, காங்கிரசுக்கு உள்ள தாக்கும் சக்தியைத் தாங்கிக்கொள்ளும் வலிவு, தி. மு. கழகத்துக்கு உண்டா என்பதாகும்.

என்ன சொல்கிறாய் தம்பி! தாங்கும் சக்தி இருக்கிறதா?