பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

நோக்கம் மறந்து, தம் நாக்கு வலிக்கத் திட்டுகிறார்களே, அதை எண்ணி அல்ல.

நாடு உள்ள நிலையைக் கண்டு, தம்பி! உனக்குக் கண்ணீர் பொங்கவேண்டும்!

வளம் குறைந்து, வாழ்வுக்கான வகைகள் குன்றி, வாழ்க்கை நடத்தத் தேவைப்படும் வருவாய் தேய்ந்து, தேய்ந்த வருவாய்கொண்டு வயிற்றையேனும் கழுவிக்கொள்ளலாம் என்றெண்ணி, அங்காடி சென்று, பண்டம் பலவற்றின் விலையைக் கேட்டிடின், பற்றி எரியுதே வயிறு என்று பலரும் பதறும்படி விலைகள் யாவும் ஏறிவிட்ட நிலையிலே, நாடு இருக்கிறது.

நல்லவர்கள்! நம்மவர்கள்! வல்லவர்கள்! வாழவைக்கவந்தவர்கள்— என்றெல்லாம் சாற்றுக்கவிபாடி ஏற்றுக்கொண்டனர் மக்கள், காங்கிரஸ் ஆட்சியினை, ஆண்டு பதினைந்தை எட்டிப் பிடிக்கிறோம். இந்நிலையில் இந்நிலை! என்னென்பது!

வடித்த சோறு போதாமல், வயிற்றைப் பிசைந்து வாட்டமுறும் வறியோர் நிலையினை எண்ணிப்பார்!

மாற்று ஆடை கிடைக்காமல், மரத்தில் பாதி உடலில் பாதி சுற்றியபடி உலர்த்திடும் மாதர் நிலையை, மனதில் கொண்டு பார்த்திடு!

உருகி உடல் கருகி, உள்ளீரல்பற்றிய நோய், உயிரைக் குடிப்பது தெரிந்தும், அதனைப் போக்கிடும் மருந்து வாங்கிடப் போதிய பணம் இல்லாமல், அணையும் விளக்கு என்றறிந்தும், எண்ணெய் இல்லாது ஏக்கமுறும் நிலையைத், தம்பி! நினைத்துப்பார்.

இரத்தம் தோய்ந்த வாயுடனே, கொல்லும் புலி உலாவுகையில், குட்டியை இழந்த தாய்மானும், குப்புற வீழ்ந்து மடிந்துபடும் கொடுமை நிறைந்த காட்சியைப் போல், கொள்ளை இலாபம் அடித்தவர்கள் கோலாகலமாம் வாழ்க்கையிலே, குடிசையில் சுருண்டு படுத்துழலும் ஏழையின் நிலையை எண்ணிப்பார்!

திண்டுகள் அடுக்கிச் சாய்ந்துகொண்டு, நோட்டுகள் நெளியும் பெட்டியுடன், சேட்டுகள் கடையில் இருக்கையிலே. மூக்குத்தி அடகு வைத்துவிட்டு, பதிலுக்கு, துடைப்பக் குச்சியைச் சொருகி நிற்கும் அந்த சொக்கி, சுப்பி, இவர்களைப்பார்!!