177
களஞ்சியம் நிரம்பி வழிந்ததனால், மற்றதை மூட்டைகளாய்க்கட்டி, மாட்டுத் தொழுவம் தனில் போட்டு வீட்டுக்குப் போடா, வேலப்பா! எனக் கட்டளையிட்டிடும் கனதனவான்; அவன் கழனி உழுது செல்வம் சேர்த்து, மாளிகைக் கதனைச் சொந்தமாக்கி, மனைக்கு ஓடும் இல்லாமல், கூரைவேய்ந்து குடி இருந்து, குப்பி கொடுத்த சோற்றுருண்டை உள்ளே போக வெங்காயம், தேடி அலைபவன், வேலப்பன்! . நாட்டின் நிலைமை இதுதானே—இன்னும் பலப்பல கூறிடவோ!
இவைகளை எண்ணி, உன் மனதில், இரக்கம் அன்பு எழல் வேண்டும்; அறநெறி அரசு சென்றிட்டால், அவதி இத்துணை இராதென்ற எண்ணம் மலரும், சிந்தித்தால். அறநெறி அரசு செலவேண்டின், அரசு நடக்கும் போக்கினையும், அறநெறிக்கான முறைதனையும், அனைவரும் அறியச் செய்திட, நாம், ஆவன செய்திடவேண்டாமோ? அதற்கு ஏற்ற வாய்ப்புத்தான், அடுத்துவருகிற பொதுத்தேர்தல்! ஆட்சி நடத்தும் காங்கிரசு அரை கோடி அளவு என்கிறார்கள்; ரூபாய்களைக் குவித்துக்கொண்டு, தாக்கும் நோக்குடன் இருப்பதனைக் காணுகிறோம்; எனின், கடமை செய்திட மறந்திடல், அறம் அலவே.
நாடு முழுவதும் நம் வீடு! நாட்டிற்குழைத்தல் நம் கடமை! ஆட்சி அமைத்திட அரும் வாய்ப்பு அடுத்து வருகிற பொதுத்தேர்தல்.
பணத்தாலான கோட்டைக்குள்ளே பதுங்கிக் கொண்டால், பயந்துபோய், நமக்கேன் இந்த வீண்வேலை, நத்திப்பிழைப்போம் என்று கூற, நாமென்ன மரபு அறியா மாக்களோ அல்லது மரக்கட்டைளோ! இல்லை, தம்பி! நான் அறிவேன்! எடுத்ததை முடித்திடும் ஆற்றல்மிக்க, ஏறுகள் உண்டு நாட்டினிலே! அவர்க்கு எதையும் தாங்கும் இதயம் உண்டு! ஏமாறமாட்டார், பணக் குவியல்கண்டு! என்பதனை நான் அறிந்துள்ளேன்.
எதனையும் தட்டிக் கேட்டிட நாம் இத்துணை வலிவுடன் உள்ளபோதே, ஊர்க்குடி கெடுத்திடும் பேர்களுடன் உறவுகள் கொண்டு, பணம் குவித்து, உழைப்போர் குடியை உருக்குலைத்து ஊராளும் வழிக்கு விலைபேசி, வெற்றிகள் பெற்றிடும் நினைப்புடனே! உலவுது காங்கிரசு, மமதையுடன்.