பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

அம்மையார், ஒளிவு மறைவு இன்றி, அச்சம் தயை தாட்சணியத்துக்குக் கட்டுப்பட மறுத்து, உண்மையை, விளைவுபற்றிய கவலையற்று எடுத்துப் பேசுகிறார்கள். காரணங்களை அழகுற எடுத்துக் காட்டுகிறார்கள். என் செய்வர் காங்கிரஸ் தலைவர்கள்—தொண்டர்கள்! மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருக்கிறார்கள்.

பொதுத் தேர்தலுக்காகக் காங்கிரஸ் கட்சி, சல்லடம் கட்டிக்கொண்டு. சங்கநாதம் எழுப்பிக்கொண்டு, சந்துமுனைச் சிந்து பாடுவோரில் இருந்து, சந்தைக்கடை தரகு வியாபாரி போலப் பேரம் பேசிக்கொண்டு சோரம் போகத் தயாராக இருக்கும் பேர்வழிகள் வரையில் படைதிரட்டித் தயாராக வைத்துக்கொண்டு, இருக்கும் நேரமல்லவா!!

தயாரிக்கப்பட்ட மாலையைக் கழுத்திலிருந்து கணுக்கால் வரையில் தொங்கத்தொங்க போட்டுக்கொண்டு, ‘தேச பக்தர்கள்’ பட்ட கஷ்டநஷ்டங்களை, சிதம்பரனார் செக்கிழுத்ததை, குமரன் மண்டை உடைந்ததை, கொடிய அடக்கு முறைக்குப் பலியானதைக் காங்கிரஸ் பேச்சாளர்கள் எடுத்துக் கூறி, ‘அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியின் அபேட்சகர் இவர்’ —என்று அர்ச்சனை செய்வதைக் கேட்டு அகமகிழும் நேரம்! அமைச்சர் வேலை நிச்சயம் கிடைக்குமா, முழு அமைச்சரா, குட்டி அமைச்சரா, ஏதாகிலும் கிடைக்குமா என்று ஆரூடம் பார்க்கும் நேரம்! அவர்களே கேட்டு ஆச்சரியப்படும்படி, துதி பாடகர்கள், கட்டணம் பெற்றுக்கொண்டு, புகழுரைகளைப் பொழியும் நேரம். அப்படிப்பட்ட நேரத்தில், இப்படிப்பட்ட தூற்றல் கணைகளை அம்மையார் தொடுப்பது, தம்பி! பருவ மங்கையின் கழுத்தில் தாலிகட்டப் போகும்போது, மாப்பிள்ளைக்குக் ‘காக்காய் வலிப்பு’ வருவதுபோலவும், சீனியுடன் பிஸ்தா பருப்பும், குங்குமப் பூவும் போட்டு, காய்ச்சி வெள்ளிப் பாத்திரத்திலே ஊற்றி, காலில் சதங்கை கொஞ்சிட, கண்களில் கனிவு ஒழுகிட, அன்னநடை நடந்துவரும் ஒரு சின்ன இடைக் கிளிமொழியாள் தர, ஒரு முழுங்கு பருகும் போது, பாலில், செத்துக்கிடக்கும் பூச்சி இருப்பது கண்டால், எப்படிக் குமட்டுமோ, அதுபோலவும் அல்லவா இருக்கும்.

கொண்டாட, புகழ்பாட, கொடிதூக்கிகள் கும்பல் கும்பலாகக் கிளம்பியுள்ள நேரம் பார்த்தா, அமைச்சர் வேலை பார்க்கும், அமைதியான இயல்புபடைத்த திருமதியார் இலட்சுமிமேனன், இப்படிப்பட்ட, அருவருப்புத்தரத்தக்க இழி மொழிகளை வீசுவது!! பரிதாபம்! பரிதாபம்!!